பிக் பாஷ் டி20 லீக் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது.
அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் நேற்று ஹோபர்ட் ஹரிகேன்ஸ்- பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற ஹோபர்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதிரடியாக ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் மட்டும் இழந்த நிலையில் 184 ஓட்டங்களை குவித்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய அணித்தலைவர் பெய்னே அதிரடியாக விளையாடி 58 பந்தில் 87 ஓட்டங்கள் குவித்தார். அடுத்து வந்த சங்கக்காரா 43 ஓட்டங்களும், ஜார்ஜ் பெய்லி 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு தொடக்க வீரர்கள் பியர்சன் (29), சிம்மன்ஸ் (16) ஓரளவு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
பின்னர் வந்த புளொரோஸ் (42), ரியர்டன் (41) அதிரடியாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.
இதனால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெய்னே ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.