துணுக்காய் வலயக் கல்வி பணிப்பாளரின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க கோரியும் இடம் மாற்றம் செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம்.
மாங்குளத்தில் அமைந்துள்ள துணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை 4.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி எல்.மாலினி வெனிற்றனின் முறைகேடுகள் தொடர்பாக நீதியான விசாரனையொன்றைக்கோரியும் அவருக்கு இடமாற்றம் வழங்க கோரியும் வலய கல்விபணிப்பாளர் மீது 17 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆசிரியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிசார் ஆசிரியர்களுடன் முரண்பட்டதுடன் அவர்களை கைது செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் ‘ஆசிரியர் சங்கத்தை அச்சுறுத்தாதே’ காவல்துறையை வைத்து ஆசிரியர்களை அச்சுறுத்தாதே போன்ற கோசங்களை எழுப்பினர்.
அத்துடன் எங்கே எங்கே ‘1.4 மில்லியன் எங்கே’ ‘பிள்ளைகளுக்கு வந்த சப்பாத்து எங்கே’ போன்ற கோசங்களை ஆசிரியர்கள் எழுப்பினர்.
முன்னாள் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் செல்லையா அமிர்தலிங்கம் ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்
வலயக்கல்வி பணிப்பாளரின் நடவடிக்கை காரணமாக ஆசிரியர்கள் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அதுகுறித்தும் பணிப்பாளரின் முறைகேடுகள் குறித்தும் வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ் ஆர்ப்பாட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலார் ஜோசப் ஸ்ராலின் கருத்து தெரிவிக்ககையில்
துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளருக்கு எதிராக 17 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வடமாகாண சபைக்கு அறிவித்தும் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆசிரியர்கள் மேல் மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் நடவடிக்கை மற்றும் நிதிமோசடி போன்றவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்தகட்டமாக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தின் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
துணுக்காய் அம்பாள்புரம் அ.த.க பாடசாலையின் ஆசிரியர் திருமதி விஜியலலிதா பிரகலாதன் கருத்து தெரிவிக்கையில்
யுத்தத்தின் வடுக்களை சுமந்து நிற்கும் இந்த மக்களின் பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளர் தங்கள் பிள்ளைகளை ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகவும் துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளருக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் அதே நேரத்தில் நடத்தப்பட்டது.
பாடசாலை மாணவர்களை அதிகமாக கொண்ட குழுவினரால் நடத்தப்பட்ட இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது வலயக்கல்வி பணிப்பாளரை மாற்ற அனுமதிக்கமாட்டோம், எங்கள் கல்வியில் கைவைத்தால் நாங்கள் முறியடிப்போம், இலங்கை ஆசிரியர் சங்கமே எமது வலய கல்வி பணிப்பாளரின் கல்வி அபிவிருத்தி திட்டங்களுக்கு தடை போடாதே போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் பிரதேசவாத கருத்துக்களை முன்வைத்தனர்
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி எல்.மாலினி வெனிற்றன்
ஆசிரியர் சங்கத்தின் எந்த குற்றச்சாட்டுக்களும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனக் குறிப்பிட்டார். ஆசிரியர்களின் செயற்பாடுகள் மந்தமாக இருப்பதாகவும் கல்வி கற்பிப்பதில் அசிரியர்கள் அலட்சியமாக செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய அவர் ஆசிரியர்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது. ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் இந்தவிதமான இடையூறுகளுக்கு நாங்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவையில்லை என குறிப்பிட்டார்.