துருக்கிக்கு நாடு கடத்தப்படும் அகதிகள்

310
சட்டவிரோதமாக தங்கள் நாட்டில் குடியேறியுள்ள அகதிகளை கிரீஸ், துருக்கி நாட்டுக்கு திரும்ப அனுப்பிவருகின்றது.சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உட்பட உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்கு படையெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக ஆபத்தான கடல் பயணங்களின் மூலம் தஞ்சம் கோருகின்றனர், ஜேர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகள் தஞ்சம் அளித்தாலும் மற்ற நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

சமீபத்தில் பாரீஸ் மற்றும் பிரெஸல்ஸில் நடந்த தாக்குதல்களால் கடுமையான நடவடிக்கைகளை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சமீபத்தில்கூடி ஆலோசனை நடத்தியதில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் துருக்கிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி கிரீஸ் தீவுகளில் தங்கியுள்ள அகதிகளை துருக்கி திரும்பப் பெற்றுக் கொள்ளும். அதற்கு பிரதி பலனாக துருக்கிக்கு பெரும் தொகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என முடிவு செய்யப்பட்டது.

இதில் முதல்கட்டமாக, நேற்று 202 பேர் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிரீஸ் பாதுகாப்பு படையினருக்கும், அகதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த எதிர்ப்பையும்மீறி தற்காலிக சிறையில் இருந்து பேருந்து மூலம் ஏற்றிச் செல்லப்பட்ட அகதிகள், சியோஸ் தீவு வழியாக துருக்கி நாட்டிலுள்ள டிகிலி துறைமுகத்துக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கியை உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளில் துருக்கி குடிமக்கள் விசா இன்றி பயணம் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் தஞ்சமடையும் சட்டப்பூர்வமான சிரியா அகதிகளை மட்டும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி துருக்கியில் சிரியாவை சேர்ந்தவர்களை மட்டுமே முகாமில் தங்க வைப்பது என்றும், மற்ற நாடுகளை சேர்ந்தவர்களை தாய்நாட்டுக்கே திருப்பி அனுப்புவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கிரீஸின் இந்த முடிவுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச பொது மன்னிப்பு சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

SHARE