தென்னாபிரிக்கா மீது இலங்கை அரசுக்கு சந்தேகம் சமாதான முயற்சியில் சிக்கல்!

583

 இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது.

தென்னாபிரிக்கா பக்கச் சார்பாக நடக்க முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் அரச தரப்பினரிடம் திடீரென ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைதி முயற்சிகளில் ஒரு மூன்றாம் தரப்பாக ஈடுபடுமாறு தென்னாபிரிக்காவுக்கு இலங்கை அரசே அழைப்பு விடுத்திருந்தது.

கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு வந்திருந்த தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவைச் சந்தித்து இது பற்றிப் பேசினார்.

அதன் பின்னர் இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை தென்னாபிரிக்க அதிபர் நியமித்தார். அமைதி முயற்சிகளில் மிகுந்த அனுபவம் மிக்கவரும் அதிபர் சூமாவுக்கு நெருக்கமானவருமான சிறில் ரமபோஷா சிறப்புத் தூதராக நியமனம் பெற்றார்.

அவரது அழைப்பின் பேரில் இலங்கை அரசதரப்புக் குழு ஒன்று தென்னாபிரிக்காவுக்குப் பயணமாகியது. அந்த நாட்டின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்த அந்தக் குழு, இலங்கையின் நிலைமைகள் தொடர்பிலும் விளக்கியது.

அந்தப் பயணத்தைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் தென்னாபிரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடனான சந்திப்பின் போது தனது இலங்கைக்கான பயணத் திகதியை ரமபோஷா தெரிவித்திருந்தார்.

இப்போது இந்த விவகாரமே அரச தரப்பினரிடையே சிக்கலானதாக மாறியிருக்கிறது. இலங்கைக்கான பயணம் குறித்து அரசதரப்புக் குழு தென்னாபிரிக்கா சென்ற போது ரமபோஷா தெரிவித்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதன் பின்னரும், தனது பயணம் குறித்து அரசுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையில் பயணத் திகதிகள் குறித்து கூட்டமைப்பினரிடம் அவர் எடுத்துக் கூறியிருப்பது தமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரச தரப்பினர் கூறுகின்றனர்.

புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுக்களில் அனுசரணைப் பணியாற்றி வந்த நோர்வேயும் பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்னர் முன்வைக்கப்பட்டன.

இப்போது தென்னாபிரிக்காவும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதால் தான், முன்கூட்டியே அவர்களுடன் நெருக்கமாகப் பழகி விடயங்களைத் தெரிவிக்கிறார்களா? என்தே அரச தரப்பிரினரிடையே ஏற்பட்டுள்ள சந்தேகம்.

எனினும் இந்தச் சிக்கலைத் திறம்படக் கையாண்டு, திட்டமிட்டபடி ரமபோஷா இலங்கை வருவார் என்றும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 

 

SHARE