2016ம் ஆண்டில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பியிருக்கும் வேளையில் தென்பகுதி அரசியலில் மிகப்பெரும் முரண்பாடுகள் வெளிக்கிளம்பியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசை எதிர்ப்பதில் கங்கணம் கட்டி நிற்கின்றார். உங்களால் முடியாவிட்டால் ஆட்சியை என்னிடம் தாருங்கள். நான் நாட்டை எப்படி ஆட்சி செய்து காட்டுகிறேன் பாருங்கள் என்று மார்தட்டும் மகிந்த ராஜபக்சவுக்கு வெறும் வார்த்தைகளால் பதில் அளிப்பதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்து வருகிறார்.
ஐயா! தாங்கள் நாட்டை ஆட்சி செய்த இலட்சணம் கண்டுதானே நான் களத்தில் இறங்கினேன். உங்களின் ஆட்சி எப்படிப் போனது? என்ன நடந்தது? என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும் என்பது ஜனாதிபதி மைத்திரியின் பதிலாகும்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்ச தரப்பை எதிர்ப்பதில் தீவிரமாக உள்ளார்.
இந் நிலைமைகள் தென்பகுதியில் புதியதொரு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இஃது தமிழ் மக்களைப் பொறுத்தவரை நல்லது அல்ல என்றே கூற வேண்டும்.
ஏனெனில் தென்பகுதியில் அரசியல் குழப்பங்கள் இருக்குமாயின் அது தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்குத் தீர்வு என்ற விடயத்தை திசை திருப்பும் என்பதே உண்மை.
அதாவது தீர்வு என்ற எதையும் இலங்கை அரசு தரப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
இருந்தும் 2016க்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாதது ஏன் என்றொரு கேள்வியை சர்வதேச சமூகம் எழுப்பினால் அதற்கு தென்பகுதியில் இருக்கக் கூடிய அரசியல் குழப்பம் காரணமாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் போனது என்று இலங்கை அரசு சாட்டுப்போக்குச் சொல்லும்.
இதனை ஏற்றுக் கொள்வதற்கு சர்வதேச சமூகம் தயாராக இருக்கும் என்பது உண்மை.
ஆக, இனப்பிரச்சினைக்கான விடயத்தை விலத்தி ஓடுவதற்கு தென்பகுதியில் இருக்கக்கூடிய அரசியல் சர்ச்சைகள் சந்தர்ப்பமாக அமையும் என்பது ஏற்புடையது.
இது தவிர அரசியல் சர்ச்சையை நிறுத்துவதென்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசுக்கு அவ்வளவு கடினமல்ல.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆட்சியில் கையாண்ட நடைமுறைகளில் ஒரு சிலவற்றை பிரயோகித்தாலும் அரசியல் சலசலப்புகள் அடியோடு நின்று போகும். இருந்தும் அதைச் செய்வதற்கு அரசு தயாரில்லை.
ஏனெனில் போர்க்குற்ற விசாரணை; இனப் பிரச்சினைக்கான தீர்வு, சர்வதேசத்தின் தலையீடு, ஜெனிவாவுக்கான பதில் அளிப்பு என்பவற்றோடு ஒப்பிடுகையில், தென்பகுதியில் தற்போது இருக்கக்கூடிய சலசலப்புகள், குழப்பங்கள் ஒன்றும் பெரிதல்ல.
எனவே, பெரிதுபடுத்தத் தேவையில்லாத ஒன்றைத் பெரிதுபடுத்திக் காட்டுவதன் மூலம் பெரிதுபடுத்த வேண்டியதை சாதாரணமாக்கி விட முடியும் என்ற கோட்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தெரிகிறது.
எது எப்படியாயினும் சர்வதேச சமூகத்துக்கு எங்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறி தென் பகுதி அரசியல் குழப்பங்கள் தமிழ் மக்களை கடுமையாகப் பாதிக்கும் என்ற யதார்த்தத்தை வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்தின் ஊடாக வலியுறுத்துவதை தமிழ்த் தரப்புகள் செய்தாக வேண்டும்.
இதைச் செய்யாதவிடத்து தமிழ் மக்களின் எதிர்காலம் மிகவும் பயங்கரமானதாக அமையும் என்பது சர்வ நிச்சயம்.