தெற்கில் பொலிஸ்காரர் ஒருவரை பிக்கு ஒருவர் கிரனைட் வீசி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் சில வேளைகளில் வடக்கில் நடந்திருந்தால் நிலமை படு பயங்கரமாக்கப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தெற்கேயுள்ள ஒரு பிரதேசத்தில் பிக்கு ஒருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை கொடுக்கச் சென்ற பொலிஸாரை அந்த பிக்கு கழுத்தை நெரித்துக்கொன்றுள்ளார். அத்துடன், அவர் மீது கிரனைட்டும் வீசியுள்ளார்.
இந்தச் செய்திகளை தென் பகுதி ஊடகங்கள் கூட மூடி மறைத்தன, இதேபோன்றதொரு சம்பவம் வடக்கில் உள்ள ஒருவரால் மேற்கொள்ளப்பட்டிருந்தால் நிலைமை படு பயங்கரமாகக் காட்டப்பட்டிருக்கும்.
வடக்கில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கி விட்டதாக தென்னிலங்கை ஊடகங்கள் கதறியிருக்கும்.
இந்த நாடாளுமன்றத்தில்கூட 25, 30 உறுப்பினர்கள் வடக்கில் பயங்கரவாதம் என கூறி செங்கோலைத் தூக்கி ஆர்ப்பாட்டம் செய்திருப்பர்.
ஆனால் தெற்கில் இக்கொலை நடந்துள்ளதால் ஒட்டு மொத்தமாக கூடி மறைக்கின்றார்கள் இது தான் இந்த நாட்டில் உள்ள நிலை என குறிப்பிட்டுள்ளார்.