தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய ஊழியர்கள் பணியிலிருந்து நிறுத்தப்பட்ட நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக குறிப்பிட்ட ஊழியர்கள் முப்பத்தைந்து பேர் ஒப்பந்த அடிப்படையில் சிற்றூழியர்களாக கடமையாற்றி வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை எந்த வகையான முன்னறிவித்தலும் இன்றி வேலையில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த தமிழ்தேசிய கூட்டமைபின் வடமாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்தன், பா.கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன் மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் அங்கஜன் ஆகியோர் தாம் இது சம்பந்தமான நடவடிக்கைகளை எடுப்பர் என ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்கள். இதேவேளை வட மாகாண சுகாதார அமைச்சர் தொலைபேசி மூலம் பாதிக்கப்பட்ட ஊழியாகளுடன் கதைத்தபோதிலும் ஆக்க பூர்வமான பதில் எதனையும் வழங்க முன்வராத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
இவர்கள் கடமைக்குச் செல்லாது விட்டால் ஏற்கனவே ஆளணிப் பற்றாக்குறையுடன் இயங்கும் வைத்தியசாலைப் பணிகள் பெரும் பாதிப்படையும் என்றும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.