இலங்கையில் கடந்தவாரம் மிக உன்னதமான நடவடிக்கையொன்று பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமது நாட்டின் கல்விச் சமூகத்தையும் இளம் சமுதாயத்தையும் போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பாற்றும் முயற்சியாக ஓர் அதிரடிச் சுற்றிவளைப்பு நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது. இதற்கு ‘யுக்திய’ நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இச் சுற்றிவளைப்புகளில் பல மில்லியன் கணக்கான சகல வகையான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதுடன் பல இலட்சம் பெறுமதியான வீடுகள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. இப்போதைப்பொருள் வியாபாரத்தின் முக்கிய சூத்திரதாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் பொலிசார், இராணுவத்தினர், புலனாய்வுத் துறையினர் மற்றும் கடற்படையினர், விசேட அதிரடிப் படையினர் என அரச பாதுகாப்பு இயந்திரத்தின் முழுக் கட்டமைப்பும் களமிறக்கப்பட்டுள்ளது.
இம் முயற்சியானது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். எமது நாட்டின் இளம் சமுதாயம் போதை என்னும் மார்க்கத்துக்குள் மூழ்கி பல கலாச்சார சீர்கேடுகள், வன்முறைகள், குடும்ப வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், கொலைகள், கடத்தல்கள் என பல வடிவங்களில் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அத்துடன் பல இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் பாவனையால் மிக இளம் வயதில் திடீர் மரணங்களைச் சந்தித்து வருவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளம் யுவதிகள் போதைப்பொருள் வாங்குவதற்காக பாலியல் ரீதியான துர்நடத்தைகளுக்கு உள்ளாகிவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவ் அதிரடி சுற்றிவளைப்பானது இக்கால நேரத்தில் மிகவும் அவசியமானதும் அத்தியாவசியமானதாகவும் உணரப் படுகிறது. இங்கு ஒரு கேள்வியை மக்கள் முன்வைக்கிறார்கள். கடந்த 24 மணித்தியாலத்தில் பல ஆயிரக்கணக்கான போதைப்பொருள் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யபட்ட நிலையில் பல கோடிக்கணக்கான பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை ஏன் இவ்வளவு காலமும் அரச தரப்பு செய்யவில்லை என்கிற கேள்வியும் எழுகின்றது.
இதற்குப் பின்னால் எதுவும் அரசியல் காரணங்கள் உள்ளதா என மக்கள் அங்கலாய்க்கின்றனர். வரும் வருடம் தேர்தல் இடம்பெறவுள்ளதால் வாக்கு வங்கியை நிரப்ப இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது வருட இறுதியில் இடம்பெறும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறதா?, இந் நடவடிக்கை தொடர்ந்து இடமபெறுமா?, கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வெளிவருவார்களா?, மீண்டும் போதைப்பொருள் வியாபாரம் தொடருமா? போன்ற பல கேள்விகள் மக்கள் மனதில் இருந்து வெளிப்படுகின்றன.
உண்மையில் இதய சுத்தியுடன் எமது நாட்டிலிருந்து போதைப்பொருளை முற்றாக அகற்ற இவ்வரசு தொடர் நடவடிக்கை எடுத்தால் அது ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ஆறுதலைக் கொடுக்கும். அத்துடன் எமது இளம் சமுதாயத்தை இக்கோரப்பிடியிலிருந்தும் காப்பாற்ற முடியும். அரசின் இந்நடவடிக்கை தொடருமா?