தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை :ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக

186

தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக தெரிவித்துள்ளார்.

அண்மையில் பேசிய ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சி மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இந்நிலையில், தேசிய அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் முற்றி, பிளவு ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றதாகவும், இதன் பின்னர் இணக்கப்பாடுகள் சிலவும் எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திசாநாயகவிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

கட்சியில் உள்ள முரண்பாடுகளையும் வெற்றிகொள்ள முடியும். உடனடியாக தேசிய அரசாங்கத்தை கலைக்க முடியாது. ஜனாதிபதி ஒரு கட்சியில் இருக்கையில் நாம் கட்சியை விட்டு வெளியேறி இறுதியில் ஜனாதிபதியை நெருக்கடியில் தள்ள முடியாது.

தேசிய அரசாங்கத்தில் குழப்பங்கள் உள்ளதாக கூறும் கதைகள் அனைத்துமே பொய்யானவையாகும். பிரதமரும் ஜனாதிபதியும் முரண்படுவதாக கூறி மக்களை சிலர் குழப்பி வருகின்றனர். எமது அணியிலும் சிலர் அவ்வாறான தவறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

எனினும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்த முரண்பாடுகளும் இல்லை. கருத்து கூறுவதன் மூலமாக சில தவறுகளை சுட்டிக்காட்டுவதை ஜனாதிபதி பிரதமருடன் முரண்படுகின்றார் என்ற அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. தொடர்ந்தும் தேசிய அரசாங்கமாக பயணிக்க இருவருமே தயாராக உள்ளனர்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கொள்கை ரீதியிலான பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலமாக வெற்றிகொள்ள முடியும், அதேபோல் எமது

நாட்டின் பிரதான பிரச்சினைகளை வெற்றி கொள்வதில் இன்று எமக்கு பாரிய சவால்கள் உள்ளன. பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்தே இந்த சவால்களை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. ஆகவே புரிந்துணர்வு அடிப்படையில் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டியுள்ளது என்றார்.

SHARE