தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பே தற்கொலைத் தாக்குதலை நடத்தியது

232

இஸ்லாமிய பிரிவினைவாத குழுவான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினாலேயே கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமானது  நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பதில் தாக்குதலாக இது இருக்கலாமெனவும் அமைச்சர் ருவான் விஜயவர்தன இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் அச்சமான சூழ்நிலை தொடர்பில் விவாதிப்பதற்கான விசேட பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் பிரென்டன் டர்ரன்ட் என்ற துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 50 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே  கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் 8 இடங்களில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதில் சிக்கி 321 அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

SHARE