தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வுஅவசியம்- தமிழ்மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது:

243
தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வுஅவசியம்-
தமிழ்மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது:

நோர்வேயின் பிரதமருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எடுத்துரைத்தார் என அவரின் அலுவலகத் தகவல்கள் கூறகின்றன.

மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்னும் துரிதமாக இடம்பெற வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர், இச்செயற்பாடுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பும் அவசியம் எனவும் எடுத்துரைத்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பேசுகையில், தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வொன்றினை பெறுவது மிகவும் அத்தியாவசியமானது என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை உடனடிப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினாலும் வடக்கு கிழக்கு நிலைமைகளில் மாற்றமின்மையாலும் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் நோர்வே பிரதமர் ஏர்னா சோல்பேர்க்கிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே பிரதமர் ஏhனா சோல்பேர்க்கிற்கும் பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.
இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பில் காணாமற் போனோருக்கான அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன், புரிந்துணர்வை நோக்கிய பயணத்தில் இது மிகவும் முக்கியமான ஒரு படிக்கல் எனவும் இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உண்மை நிலைநாட்டப்படும் என்பதனையும் வலியுறுத்தினார்.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளில் நோர்வேயின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என நோர்வேயின் பிரதமர் தெரிவித்தார்.

SHARE