சமகாலத்தில் அரசியல் ரீதியாக தான் அடைந்துள்ள தோல்விகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடராக செயற்பட்ட சுமனதாஸ அபேகுணவர்தனவின் ஆலோசனையால் அவர் பதவி இழந்ததாக பலரினால் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலை அடுத்த மஹிந்தவை விட்டு விலகி இருந்த ஜோதிடர், மஹிந்தவுக்கு மீண்டும் ஆலோசனை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது, முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்கள் இருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என ஆலோசனை வழங்கியவர்களும், ஜோதிடர்களும் இந்த தோல்விக்கு பதில் கூற வேண்டும் என தாங்கள் நினைக்கின்றீர்களா என மஹிந்தவிடம் வினவப்பட்டுள்ளது.
அந்த காலப்பகுதியில் என்னை சுற்றியிருந்த ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமையவே நான் ஜனாதிபதி தேர்தலை நடத்தினேன் என மஹிந்த பதிலளித்துள்ளார்.
நான் ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவன். இதனடிப்படையில் அந்த நேரத்தில் நான் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்தேன். கட்சியின் சில உறுப்பினர்கள் வேண்டாம் என்று கூறிய போதிலும் நான் தேர்தலை நடத்தினேன். இறுதியில் தோல்வியடைந்தேன் என மஹிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.