அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தம்பதியரை அவர்களது மகளின் முன்னாள் காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் சான் ஜோஸ் நகருக்கு உட்பட்ட லாரா வேல்லே லேன் பகுதியில் வசித்து வந்தவர் நரேன் பிரபு.
மென்பொருள் தயாரிப்பில் உலகப் பிரசித்தி பெற்ற சிலிக்கான் வேல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், தங்களது வீட்டுக்குள் புகுந்த ஒருவன் தனது தந்தையையும் தாயையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தனது தம்பியை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருப்பதாக நரேன் பிரபுவின் மூத்த மகன் சான் ஜோஸ் நகர காவல்துறைக்கு அவசர தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த கொலையாளியை கைது செய்வதற்காக முற்றுகையிட்டனர்.
காவல்துறையினரை கண்ட கொலையாளி பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த 13 வயது சிறுவனை விடுவித்தான்.
வீட்டைவிட்டு பத்திரமாக வெளியேவந்த சிறுவனை மீட்ட பொலிசார் உள்ளே சென்று பார்த்தபோது, நரேன் பிரபு, அவரது மனைவி மற்றும் கொலையாளி மூன்று பேரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர்.
நரேன் பிரபுவின் 20 வயது மூத்த மகன் அளித்த தகவலின்படி, அவரது சகோதரியை கொலையாளியான மிர்ஸா டாட்லிக்(24) உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளான்.
வேறு இடத்தில் தங்கியிருக்கும் அந்தப் பெண்ணும் மிர்ஸாவுடன் மிக நெருக்கமாக பழகிவிட்டு, கடந்த ஆண்டு அவனை வெறுத்து ஒதுக்கி விட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மிர்ஸா டாட்லிக், இந்த படுகொலையை செய்துவிட்டு, தன்னத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விபரீதத்துக்கு காரணமான அந்தப் பெண் இச்சம்பவத்தின்போது அந்த வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.