இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டுக்கு அருகாமையிலுள்ள கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த தாழமுக்கும் விலகிச் சென்றிருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றைய தினமும் பலத்த மழை பெய்யும் என திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த மூன்று நாட்களாக நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பல பிரதேசங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு அதிக பாதிப்பு களுத்துறை, காலி மற்று கொழும்பு மாவட்டத்திற்கே ஏற்பட்டுள்ளது.
அந்த மாவட்டத்தில் 4,603 குடும்பங்களை சேர்ந்த 17,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை, பண்டாரகம, மத்துகம, பாலின்தநுவர, தொடங்கொட, ஹொரனை, அகலவத்தை, மில்லனிய, புலத்சிங்கள, வலல்லாவிட்ட, இங்கிரிய, மதுரவெல மற்றும் பாணந்துறை பிரதேச செயலகத்தின் 1385 குடும்பங்களை சேர்ந்த 5227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தின் அக்மீமன, நியாகம, யக்கலமுல்ல, பந்தேகம, தவலம், ஹபராதுவ, நாகொட, கடவத்சத்தர, இமதுவ, எல்பிட்டிய, வெலிவிட்ட திவிதுரு பிரதேச செயலகத்தின் 2292 குடும்பங்களை சேர்ந்த 8445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவ பிரதேசத்தில் 926 குடும்பங்களை சேர்ந்த 3700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக கடும் காற்று, மண் மேடு சரிந்து விழுந்தமையினால் பல பிரதேசங்களின் பல வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வலல்லாவில பிரதேச செயலகத்தின், லேதொல, ஒல்கொட பிரதேசத்தில் 3 பெண்கள் மற்றும் அகலவத்தை ரத்மலானை பிரதேசத்தில் நபர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளார்.
மலையகப் பகுதிகளில் பெய்து வரும் அடைமழை காரணமாக மண்சரிவு அபாயம் தீவிரம் அடைந்துள்ளது. பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக நாடாளவிய ரீதியில் சுமார் ஒன்பது இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.