தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்கக் கூடாது என்ற மன நிலையிலேயே சிங்களத் தலைவர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ். பொதுநூலக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 91ஆவது பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு – கிழக்கில் ஒவ்வொரு தமிழ் கிராமத்திலும் அமரர் அமிர்தலிங்கத்தின் கால்கள் பதிந்துள்ளன. மக்களோடு மக்களாக இருந்த ஒரேயொரு தலைவர் அவர் மட்டுமே.
இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன் இங்குள்ள சிறுபான்மை இனம் சுதந்திரமாக வாழ சமஷ்டி தீர்வுதான் ஒரே வழி என்று கூறியிருந்தார்.
ஜி.ஜி.பொன்னம்பலம் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட போதும் அதனை நிராகரித்து சமஷ்டிக்காகப் போராடியவர் அமிர்தலிங்கம் மட்டுமே.
1980ஆம் ஆண்டுகளில் மாவட்ட சபையை அவர் ஏற்றுக்கொண்டார். மக்கள் படும் துயரங்களாலும் முதலில் இந்த அதிகாரத்தையாவது பெறுவோம் என்ற நோக்கிலேயே அவர் அதனை ஏற்றுக்கொண்டார். இதனை முதல் படியாக வைத்துப் பயணித்தார்.
முன்னைய காலத்திலும் சரி இப்போதும் சரி சிங்களத் தலைவர்கள் கடந்த 70 ஆண்டுகளாக ஒரே கொள்கையில் உள்ளனர்.
அதிகாரங்களை வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இப்போது உள்ளவர்களிடத்திலும் சிறிதளவு கூட மாற்றம் ஏற்படவில்லை. இதனால், எமது இனத்துக்காகத் தொடர்ந்தும் போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.