வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு (1916 – 2016) பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனையும், குருதி நன்கொடை நிகழ்வும் 30.05.2016 இன்று 9.00 மணிக்கு பாடசாலையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன் மற்றும் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு கருத்து தெரிவித்த வன்னி எம்.பி.டாக்டர் சி.சிவமோகன், தொற்றா நோய்களால் மனிதர்களில் ஏற்படும் இறப்பு வீதம் தொற்று நோய்களினால் ஏற்படும் மரணங்களைவிட அதிகமானது. குறிப்பாக இருதய அடைப்பினால் ஏற்படும் இறப்புக்கள் மூன்றில் ஒரு பங்கு இடத்தைப்பிடிக்கின்றது. எனவே இது சம்மந்தமான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் எமது டாக்டர்கள் ஈடுபடுவது மிகவும் பாராட்டுக்குரியது. புதுக்குளம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களின் இந்த முயற்சிகள் தொடர எனது ஆசிகள் எனக் கூறினார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள், அரச வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


