இரவு முழுக்க தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மகளை அரிவாளால் வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
இந்த அரிவாள் வெட்டுச் சம்பவம் மட்டக்களப்பு, கோரகல்லிமடுக் கிராமத்தில் நேற்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இராசையா சசிகலா (வயது 28) என்பவர் அரிவாள் வெட்டுக்குள்ளான நிலையில், சந்திவெளிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த வீட்டிலுள்ள சகோதரிகள் மூவர் எந்நேரமும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பதில் நேரத்தைச் செலவிட்டு வந்தனர்.
இந்நிலையில், இரவு முழுக்க தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்து ஏனையோரின் உறக்கத்தை குழப்ப வேண்டாமென்று இவர்களின் தந்தை இதுவரை காலமும் கூறி வந்துள்ளார்.
அவ்வாறே, சம்பவ தினத்தன்றும் இவர்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது, தந்தை திட்டத் தொடங்கினார்.
ஆத்திரமடைந்த தந்தை, அதிகாலை 3.30 மணியளவில் தனது சகோதரியை அரிவாளால் வெட்டியதாக மற்றுமொரு சகோதரி பொலிஸில் வாக்குமூலமளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 68 வயதுடைய சந்தேக நபரையே பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.