ஆகையால் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளியுங்கள் என்பதை வலியுறுத்துருகின்றோம். நாங்கள் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்போம் என சபை முதல்வரும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல சூளுரைத்தார்.
அட்டன் நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருட ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷவை தோழ்வியடைய செய்ய வாக்களித்த தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் பொது தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவை தோழ்வியடைய செய்து இலங்கையில் ஒரு புதிய
மாற்றத்தினை உருவாகியுள்ளனர்.
ஜக்கிய தேசிய கட்சியின் ஊடாக பிரதமரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக ஜனாதிபதியும் இணைந்த நல்லாட்சி அரசாங்கம் ஒன்று உருவாகுவதற்கு வாக்களித்த எம்மக்களுக்கு அபிவிருத்தி பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படும்.
இதற்கிடையில் மாற்று அணியினர் பாராளுமன்றத்தில் குழப்ப நிலையையும், ஆட்சி மாற்றத்தினையும் கொண்டு வர முனைகின்றனர்.
நமது நாடு வளமிக்க நாடு ஆகும். இங்கு அபிவிருத்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த அபிவிருத்தியினை முன்னெடுக்க நல்லாட்சி அரசாங்கம் உருவாகியுள்ளது. இதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் இந்த நல்லாட்சி அரசாங்கம் அதற்கு ஒரு போதும் இடமளிக்காது.
இன்று பதுளை, நுவரெலியா, கண்டி போன்ற மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களுக்கு துரித கதியிலான அபிவிருத்தி முன்னெடுப்புகளை முனைப்புடன் செயலாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் பல நீண்ட காலமாக பின்வாங்கப்பட்ட மக்களின் தேவைகள் பூரத்தியாக்கப்படும். வீதிகள், போக்குவரத்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீர்செய்யப்படுவதுடன் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாகவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக பொய்களை தோட்ட நிர்வாகங்கள் கூறி வருகின்றன. இவ்வாறான நிலையில் தோட்டங்கள் நடத்த முடியாத பட்சத்தில் காணப்படுமாயின் நாங்கள் தைரியமாக கூறுகின்றோம் பெருந்தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள். தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நாங்கள் வழங்குகின்றோம் என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல திரைநீக்கம் செய்த பெயர்பலகை இனந்தெரியாத நபர்களால் உடைப்பு
அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவினால் திரை நீக்கம் செய்யப்பட்ட பெயர்பலகை இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு உடைத்தெறியப்பட்டுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் நேற்று வைபவ ரீதியாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல ஊடாக இந்த பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. தோட்டப்பகுதிகளில் 20 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத வீதிகளை இணங்கண்டு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்லவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மேற்படி தோட்டத்தில் மக்கள் பாவனைக்குதவாத வீதியினை புனரமைப்பு செய்வதற்காக பணிகளை முன்னெடுக்க இந்த பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.
இதனை தாங்கிக்கொள்ள முடியாத சில விஷமிகளால் பெயர்பலகை உடைத்தெறியப்பட்டுள்ளது. இவ்வாறு உடைத்தெறியப்பட்ட பெயர்பலகையை இன்று நோர்வூட் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக விஷமிகளை கண்டறியும் முகமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்கு அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் நிலையில் இவ்வாறான இழிவான செயல்களை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குமாறு இப்பகுதி மக்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.