மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இருந்த சர்வதிகாரம்; சிறுபான்மை இனங்களை வதைக்கும் கலாசாரம் என்பன மக்களால் வெறுக்கப்பட்டன.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சி நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் அருகி விடும் என்று கருதப்பட்ட நிலையில், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தமிழ் மக்கள் உதவி செய்தனர்.
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை தமிழ் மக்கள் ஆதரித்ததன் காரணமாக இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன ஆட்சிப்பீடம் ஏறினார்.
நல்ல மனிதர், எதனையும் நிதானமாகச் சிந்திக்கின்ற பக்குவமானவர் என்ற நற்பெயரைக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்றதால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகி அவர் தலைமையில் அரசும் அமைந்தது.
இவை யாவற்றிலும் தமிழ் மக்களின் வகிபாகம் பெறுமதியானது என்பதை எவரும் மறுதலித்து விட முடியாது. இந்நிலையில் புதிய அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காணத்தலைப் படுமா? அல்லது இராஜதந்திரம் என்ற பேரில் சுத்துமாத்துக்கள் நடத்தி மீண்டும் ஒரு ஏமாற்றத்தை அரங்கேற்றுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இருந்தும் புதிய அரசின் போக்கும் உடல் ஒன்று தோல்தான் வேறு என்பதாக இருப்பதைக் காண முடிகிறது. விடுதலைப் புலிகளின் காலத்தில், இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் பலம் வாய்ந்த இரு தரப்பு சம்பந்தப்படுவதாக இருந்தது.
ஆனால் விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்னர் தமிழ் மக்களின் பலம் என்பது எதுவும் இல்லை என்றாயிற்று.
எனினும் சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கொண்டே இலங்கை அரசிடம் இருந்து தமிழ் மக்களுக்கான உரிமை பெறப்பட முடியும் என்ற நிலைமை மட்டுமே இப்போதைக்கு இருக்கிறது.
ஆனால் அரசாங்கம் என்ற அடிப்படையில் சர்வதேச சமூகத்தைச் சமாளிக்கின்ற சந்தர்ப்பம் இலங்கை ஆட்சியாளர்களுக்கு அதிகம் எனலாம்.
அதேநேரம் தமிழ் மக்கள் தங்களின் பிரச்சினைகளை- நிலைமைகளை சர்வதேசத்திடம் எடுத்துக் கூறுவதென்ற விடயத்தில் பல்வேறு இடையூறுகள் உள்ளன.
இதனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் இலங்கை அரசுக்கான சர்வதேச அழுத்தம் குறைகின்ற போது, முன்னைய ஆட்சிக்கு நிகரான ஆட்சியாக தற்போதைய அரசும் மாற்றம் பெறும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
ஆக, தமிழ் அரசியல் தலைமையின் இராஜதந்திரமும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையும் ஒருமித்த இணக்கப்பாடுமே தமிழர்களின் உரிமை என்ற விடயத்தில் பலமானதாக இருக்க முடியும்.
எனினும் சுயநலம் என்பதே அரசியல் அடித்தளம் என்பதாக இருக்கும் போது அரசுடன் சேர்ந்து சலுகைகள் பெறுகின்ற எண்ணமே மேலோங்கிக் கொள்ளும் என்பதால்,
அன்புக்குரிய தமிழ் அரசியல்வாதிகளே!
தமிழினம் பட்ட பெரும்பாட்டிற்கான தீர்வு என்பதில் நீங்கள் இறுக்கமானதாக நின்றால் மட்டுமே எங்களுக்கான உரிமையின் கிடைப்பனவில் ஏதாவது நடக்கும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் வாழ்நாள் பூராகவும் பேசுபடுபொருளாக இருப்பது அர்த்தமற்றது. அது வெறுப்பையும் ஏற்படுத்தக் கூடியது. எனவே எட்டப்படும் தீர்வு விரைவாகவும் நிரந் தரமானதாகவும் அமைந்தாக வேண்டும்.