த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக காணாமல் போனவர்களின் உறவுகள் திடீரென கோஷங்களை எழுப்பியதுடன், அவருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டமையால் யாழில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்.விஜயம் மேற்கொண்டு வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் “ஜனாதிபதிக்குத் தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணாமல் போனவர்கள் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வலி.வடக்கு மக்களின் காணி விடுவிப்பு என்பவற்றை வலியுறுத்தி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனையடுத்துப் பேரணியாகச் சென்று வீதி மறியலிலும் ஈடுபட்டனர்.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் ஐவர் அடங்கிய பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்து ஜனாதிபதியைச் சந்தித்துப் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்காக வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்றனர்.
அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசுவதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் அவர் மக்களை சந்திக்காமலேயே பின்வாசலால் வெளியேறிச் சென்றார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் ஏ-9 வீதியை வழிமறித்து வீதிமறியல் போராட்டம் மேற்கொண்டனர்.
ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டிருந்தார்.
அவர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு வெளியேறிய போது அவர் நின்றிருந்த இடத்திற்குச் சென்ற மக்கள், ஜனாதிபதி தம்மை சந்திக்காமல் சென்றதற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தனர்
பாராளுமன்ற உறுப்பினருக்கெதிராக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் இரு தரப்பினருக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டமையால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைச் சற்றும் எதிர்பாராத கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த மக்களுடன் சமரசம் செய்து கொள்ள முயற்சித்த போதும் அவர்கள் அதனை நிராகரித்து விட்டமை குறிப்பிடத்தக்கது.