த.தே.கூட்டமைப்பையும், வ.மா சபையையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் குள்ளநரி ரணில் விக்கிரமசிங்க

427

இனப்படுகொலை என்ற பிரேரணை வடமாகாணசபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் மீண்டும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான இரகசியத் திட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜெனீவாப் பிரேர ணைகள் என்னவாகும் என்ற கேள்விக்குறி நிகழும் இந்தக் காலகட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும், வடமாகாண சபையின் முதலமைச்சருக்குமிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து அதில் குளிர்காய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தயாராகி வருகின்றார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கங்களில் கூறப்பட்ட விடயங்கள் போன்றே வடமாகாணசபையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாகச் சொல்லப்போனால் ஐ.நாவின் இனப்படுகொலை என்பதற்கான வரையறையானது ஐந்து அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

ranil-sampanthan-01

அதாவது,
1. ஒரு மக்கள் குழு அல்லது ஒரு மக்களினுடைய இனக் குழுவினுடைய உறுப்பினர்களைக் கொலை செய்தல்.

2. ஒரு இனக்குழுவினுடைய உறுப்பினர்களை அவர்களது உடல் ரீதி யாகவோ, உள ரீதியாகவோ தாக்குதல் அல்லது பாதிப்பை ஏற்படுத்துதல்.

3. ஒரு இனக்குழுவினுடைய இருப்பை முழுமையாகவோ, பகுதியாகவோ அழிப்பது. அழிப்பதை நோக்கமாகக் கொண்டு அதாவது அவர்களது வாழ்நிலையை சிதறடிப்பது.

4. ஒரு இனக்குழுவினுடைய குழந்தைப் பிறப்பை திட்டமிட்டு அதை தடுப்பதற்கான வழிமுறை களை மேற்கொள்ளுதல். அதாவது இனப்பெருக்கத்தை தடுப்பதற்கான வழி முறைகளை மேற்கொள்ளுதல்.

5. ஒரு இனத்தினுடைய சிறுவர்களை இன்னொரு இனத்திற்குரிய அடையாளத்திற்குரியவர்களாக கட்டாயப் படுத்தி மாற்றுவது. (மதம்,மொழி மாற்றுதல்) என்பனவாகும்.

இவை இவ்வாறிருக்க த.தே. கூட்டமைப்பிலுள்ள ஒருசில பிரதி நிதிகள் மாறுபட்டக்கோணங்களில் சென்றுகொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப தமது செயற்பாடுகளை செயற்படுத்தி வருகின்றனர் என மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது மக்களால் ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சி அல்ல. ரணில் விக்கிரமசிங்க அவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படும் சதித்திட்டமேயாகும். இவ்வாறே ஆரம்பத்தில் பிரபா-கருணாவுக்கிடையில் பிளவுகளை இவர் ஏற்படுத்தியிருந்தவர் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
இனப்படுகொலைகள் நடைபெற்ற தற்கான தடயங்களாக டுடுசுஊ ஆணைக்குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக பார்க்கும்பொழுது,
1. கொத்துக்குண்டுகளின் தாக்குதல் களினால் சிவிலியன்கள் படு கொலை செய்யப்பட்டிருத்தல்,
2. வைத்தியசாலைகள் மற்றும் தடை செய்யப்பட்ட இடங்களுக்கும் செல்தாக்குதல்களை மேற்கொள்ளுதல்.
3. ஐ.நாவின் அலுவலகங்களையும், செஞ்சிலுவைச்சங்கத்தின் அலுவலகங் களையும் தாக்குதல்.
4. மனிதநேய உதவிகளைப் புறக்கணித்தல் (உணவு, மருத்துவ உதவிகள்),
5. போரின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக்கொடியேந்தி சரணடைய வந்தோரை படுகொலைசெய்தல்.
6. அரசாங்கத்தோரை விமர்சிப்போரும், ஊடகவியலாளர்களும் மோதல் வலயத்திற்கு வெளியே துன்புறுத்தப்படல், கொலைசெய்யப்படல்.

மேற்படி விடயங்கள் குற்றங்கள் என நிரூபிக்கப்பட்டால் அது மனித நேய சட்டங்களின் கீழ் குற்றமாகும். இந்த டுடுசுஊ அறிக்கையை செயற்படுத்தும்பொழுது ஐ.நாவின் பொதுச்செயலாளராக இருந்த பான்கீமூன் இலங்கைக்கு வந்து இறுதி யுத்த காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறல் வலியுறுத்தப்படவேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ இழப்பீடுகள் அல்லது மனக்குறைகள் இருப்பின் அதற்குத் தீர்வு காணப்படும் என்றார். ஆனால் இதுவரை யில் எதுவும் இடம்பெறவில்லை.

தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த என்ன செய்யவேண்டும் என்ற விடயங்களை இட்டு பரிந்துரைகள் எதிர்பார்க்கப்பட்டன. இவ்வாணைக்குழுவிற்கு விசாரணை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்ட விட யங்களைப்பார்ப்போமானால் 21.02.2002 அமுல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்தமைக்கான காரணங்களும், அதன்பின்னர் 19.05.2009 வரையில் இடம்பெற்ற சம்பவங்களும், மேற்படி சம்பவங்கள் தொடர்பாக ஒரு நபரோ அல்லது குழு வாகவோ பொறுப்புக்கூறவேண்டும். இச்சம்பவங்கள் மூலம் நாம் கற்கவேண்டிய பாடங்கள் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்காக நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றது. மேலும் இதற்கான சட்ட நடவடிக்கைகளையும் கண்கானிக்கவேண்டி இருக்கின்றது.

RWRSJ5712

தற்பொழுது ஆட்சியிலிருக்கும் அரசினால் குறிப்பிடப்படும் விடயங்களும் டுடுசுஊயின் பரிந்துரைகளில் கவனம் செலுத்தப்பட்டது. அது கைகூடாது போனது கவலைக்குரிய விடயமே. அதில் குறிப்பிடப்பட்ட விடயங்களைப் பார்க்கின்றபொழுது, சிவிலியன் பாதுகாப்பு நிமித்தமாக வடகிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் இராணுவ ஆட்சியிலிருந்து மேற்படி பிரதேசங்கள் விடுவிக்கப்படுதல்.

சட்ட விரோதமாக சுடுகலன்களைப் பயன்படுத்தும் குழுக்களை தடைசெய்தல்.
காணாமற்போதல் கடத்தப்படுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்தல்.
சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்டவர்கள் பற்றி முறையான விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தின் தீர்வுகளை மேற்கொள்ளுதல்.

இராணுவம் தான்தோன்றித்தனமாக வடகிழக்கு மாகாணங்களில் காணி களைப் பயன்படுத்துவதை நீக்கி தேசிய காணிக்கொள்கை அமைக்க விசேட காணி ஆணைக்குழுவொன்றினை நிறுவி விசேட காணி ஆணையாளரை நியமித்து காணிகளின் பிணக்குகளைத் தீர்த்தல்.

கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தையும்தகவல்களை வெளியிடும் சுதந்திரத்தையும் உறுதிசெய்யப்படுதல் வேண்டும்.

பெண்கள், சிறுவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் வலது குறைந்தோர் ஆகியோருக்கான விசேட வசதிகளையும், பாதுகாப்பினையும் ஏற்படுத்தல்.

சர்வதேச நியமங்களுக்கமைய யுத்தத்தினால் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈழு வழங்குதல் மற்றும் மரணச்சான்றிதழ்களை விநியோகித்தல்.

தேசிய இனங்களுக்கிடையில் நட்புறவினையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த நீண்டகால வேலைத் திட்டத்தை அமுலாக்குதல்.

13ம் திருத்தச்சட்டத்தை உருவாக்கி அரசி யல் தீர்வொன்றினை எட்டுதல்.

மும்மொழிக்கொள்கையை சகல பாடசாலைகளுக்கும் அமுலாக்கல்.

சமாதானக் கல்வியை உத்தர வாதப்படுத்தல்.

கல்வியில் சம சந்தர்ப்பங்களை வழங்குதல்.

தேசிய ஐக்கியத்திற்கான கலையையும், கலாசாரத்தையும் மேம்படுத்தல்.

மோதல் பிரதேசங்களுக்கு அண்மையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையகத் தமிழர்கள் உட்பட சகல மக்களினதும் விசேட பிரச்சினைகளுக்குத் தீர்வினைக்காணல்.

தேசிய ஐக்கியத்திற்கான சிறந்த பிரதிபலிப்பினைக்காட்டும் புலம்பெயர்ந் தோருடன் சிறந்த ஒத்துழைப்பினை அமுலாக்குதல்.

சட்டம், சட்ட நிறுவனங்கள் நீதிமன்றங்கள் ஆகிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய ஒத்துழைப்பினை பெறவேண்டும். அதேசமயம் சட்டம் நிலைநாட்டப்படவேண்டும்.
இப்பரிந்துரைகளோடு முக்கிய அவதானிப்புக்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன. தற்பொழுதும் அதே பாணியிலான நிலவரமே காணப்பட்டு வருகின்றது.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின்பொழுது இனப்படுகொலை இங்கு இடம்பெற்றது என்பது நிரூபணமாகியுள்ளபோதிலும் அதற்கான தீர்வுத்திட்டங்களை வழங்குவதற்கு ஐ.நாவும், அரசும் தாமதித்து வருவதற்கான காரணிகள் பல இருக்கின்றன. அதாவது தற்போதிருக்கக்கூடிய பிரதமர் அவர்கள் அமெரிக்காவுடன் தனது நட்புறவினை ஏற்படுத்திக்கொண்டு, தனது ஆட்சியினை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், பிராந்திய பாதுகாப்பினை ஏற்படுத்திக்கொள் வதற்காகவும் இராணுவத்தரப்பினை காட்டிக்கொடுக்காது தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை களில் தீவிரம் காட்டிவருகின்றார்.

குறிப்பாக இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை இலங்கையில் சர்வதேச யுத்த சட்டங்களையும் பல்வேறு உடன்படிக்கைகள் மூலம் கடப்பாடு கொண்ட உரிமைச்சட்டங்களையும் இலங்கை அரசு மீறியுள்ளது. ஐ.நா சபை இதுபற்றி விசேட விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். இதற்கான தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் ஐநா வழங்கத் தயாராகவுள்ளது. ஆனால் இத்தனை தன்மைகளையும் கொண்டிருந்த போதிலும் அதற்கு தற்போதிருக்கக்கூடிய அரசும் செவிசாய்ப்பதாகவில்லை. யுத்தத்தின் பின்னர் கீழ்காணும் விடயங்களில் ஒருசில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்துதல், மிதிவெடியகற்றல், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு, மொழிக்கொள்கை அமுலாக்கம், தமிழ்மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களை உள்வாங்கல், வடக்கில் சிவில் நிர்வாகத்திடமிருந்து ஆயுதப்படைகளை நீக்குதல், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்பட்ட காணி களை மீள்குடியேற்றத்திற்காக வழங்கல், வடகிழக்கில் உத்தியோகபூர்வமாக சனத்தொகையினை தயார்படுத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

நிலைமைகள் இவ்வாறிருக்க வடமாகா ண சபையினால் முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கான தீர்மானமானது டட்லி ஒப்பந்தம், பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதைப் போன்றதான நிலைக்குள் இப்பிரேரணையும் தள்ளப் பட்டிருக்கின்றது. குறிப்பாகக் கூறப் போனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஈ.வா.வனசுந்தர- சட்டமா அதிபர், கோத்தபாய ராஜபக்ஷ – முன்னாள் பாதுகாப்பு செயலர், மொகான் பீரிஸ் – முன்னாள் சட்டமா அதிபர், விக்டோரியா நூலன்ஞ் – அமெரிக்க இராஜாங்க திணைக்கள ஊடகப்பேச்சாளர், இந்திய வெளிவிவகார அமைச்சு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.இராதா கிருஷ்ணா, அலெக்ஸாண்டர் லுக்கர் செவிஷ – சோவியத் வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர், கத்தரின் அஸ்ரன் – ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர், கமலேஷ் சர்மா – பொதுநலவாய நாடுகளின் செயலா ளர் நாயகம், இலங்கைக்கு விஜயம் செய்த கனேடிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு, ஸ்லோவேனியா அரசாங்கம் வெளியிட்டுள்ள ஓர் அறிவித்தல், ஹிலரி கிளின்டன் – முன்னாள் இராஜாங்க செய லர், ஐலீன் செம்பர்லேன் டொனஹோ – ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமெரிக்கத் தூதுவர், அலிஸ்ரெயார் பர்ட் – பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சர், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகளின் ஜெனீவா தூதுவர் குழுவின் சீனப் பிரதி நிதி, கலாநிதி சுரப்பொங் தொக்சக் தாயி குல் – தாய்லாந்து நாட்டின் வெளிநாட்டு அமைச்சர், எரிக்சொல்ஹெய்ம் – நோர்வே நாட்டின் சுற்றாடல் சர்வதேச அபிவிருத்தி பற்றிய அமைச்சர், கெவின் – அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், சர்வதேச மன்னிப்புச்சபை, சிறுபான்மையினரின் உரிமைகளைப்பற்றிய சர்வதேச அமைப்பு, சர்வதேச மனித உரி மைகள் அவதானிப்புக்கள், சர்வதேச நெருக்கடிகள் குழு என்ற முக்கிய பிரதிநிதிகள் தமது கருத்துக்களைக் தெரிவித்துள்ளனர். தமது வலியுறுத்தல்களையும், மேற்பார்வைகளையும் இவர்கள் மேற்கொண்டபோதும் அவை கைகூடாமல் போனவிடத்து மீண்டும் தமிழ் மக்களுக்கான தீர்வினை முன்னெடுத்துவருகின்றோம் எனக் கூறிவரும் மைத்திரி – ரணி லின் தேசிய அரசினது செயற்பாடானது தமிழினத்தை ஏமாற்றும் நடவடிக்கையாகவே அமையப்பெறுகின்றது. த.தே. கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான ஒரு பிரசுரம் கடந்த காலங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 29 முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. அதனைப் பார்க்கின்றபொழுது மீண்டும் தமிழினம் மனவேதனையை அடைவதற்கான வாய்ப்புக்களே இருக்கின்றன.

நல்லிணக்கம் தொடர்பில் கட்சித்தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் எந்தவொரு நன்மையையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தவில்லை. வடமாகாண சபையில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானமானது மிகவும் பெறுமதி வாய்ந்தது. இதனை உதாசீனப்படுத்தும் வகையில் த.தே.கூட்டமைப்புடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செயற்பட்டு வருவது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. தமிழி னம் பல்வேறு பேச்சுவார்த்தைகளைக் கண்டு ஏமாற்றமடைந்த வரலாறு களே இருக்கின்றது. எனினும் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் காலத்திலும், ஓய்வு பெற்ற நீதியரசரும், தற்போதைய வட மாகாணசபையின் முதலமைச்சரின் காலத்திலும் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் என நம்பியுள்ள இந்நேரத்தில், இதற்கு எதிர்மறையான செயற்பாடுகள் மறைமுகமான முறையில் முன்னெடுக்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எவ்வாறாவது த.தே.கூட்டமைப்புக்கும், வடமாகாணசபைக்கும் இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து, வடகிழக்கின் அபிவிருத்திக்கு என அமைச்சுப்பதவிகளை வழங்கி, போரினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கு வதன் ஊடாக இடம்பெற்றது இனப்படு கொலை அல்ல என்பதை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டமுடியும் என்பதே அவரின் நோக்காகக் கருதப்படுகின்றது. உள்ளே மிருகம் வெளியே கடவுள் என அமெரிக்காவின் செயற்பாடுகள் அமையப்பெற்றிருக்கும் இந்நேரத்தில் மீண்டும் தமிழ் மக்களின் கண்களில் மண்ணைத்தூவும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுகிறது. இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு த.தே.கூட்டமைப்பும், வடமாகண சபையும் இணைந்து எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களை இரகசியமான முறை யில் செயற்படுத்தவேண்டும். எதிர்க்கட்சிப்பதவிக்கு ஆசைப்பட்டு தமிழ் மக்களை விற்றுப்பிழைக்கும் நிலைக்குச் சென்றுவிடக்கூடாது. அதனையே தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர். பதவி மோகங்களைக்காட்டி தமிழ் மக்களை ஏமாற்றமுடியும் என்ற நிலைக்கு அரசு வந்துள்ளது. இங்கேதான் தமிழினமும், த.தே.கூட்டமைப்பும், வடமாகாண சபையும் எங்கே நிற்கின்றது என்பதை ஒருமித்து ஆராயவேண்டும். ”கோவணம் கட்டினாலும் தமிழன் கொள்கை மாறக்கூடாது’ என்பதற்கமைய செயற்பாடுகள் நகர்த்தப்பட்டால் அதுவே தமிழினத்தின் விடிவிற்கு ஒரு மைல்கல்லாக அமையும்.

  • இரணியன் –
SHARE