நச்சுத்தன்மையற்ற நாடு தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நாடெங்கிலும் நடைமுறைப்படுத்தி அரசாங்கம் நாட்டில் ஒரு ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் மிகப்பெரும் பொறுப்பை நிறைவேற்றி வருகின்றது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
எனவே அந்த நிகழ்ச்சித்திட்டங்களுடன் எல்லாத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற 'நச்சுத்தன்மையற்ற நாடு' தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு கடினமாக இருப்பதற்குக்காரணம் பல்தேசிய நிறுவனங்கள் முன்னெடுத்துவரும் பாரிய பிரச்சார உத்திகளாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, அவற்றைத் தோற்கடித்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்குமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு எல்லா ஊடக நிறுவனங்களும் கவனம்செலுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
எமக்கு கிருமிநாசினிகளை அறிமுகப்படுத்திய உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் இன்று அவற்றின் இடர்நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு அவற்றிலிருந்து படிப்படியாக நீங்கிவருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கு சவாலாக அமைந்துள்ள கிருமிநாசினிகள், இரசாயன உரங்கள் போன்றவற்றிலிருந்து படிப்படியாக நீங்க நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தி செயன்முறை தொடர்பில் கவனம்செலுத்துவது முக்கியமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நச்சுத்தன்மையற்ற நாடு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உடவளவை வலையம், மஹவலி பீ வலயம் மற்றும் திருகோணமலை மாவட்டம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் பெரும்போகத்தின்போது ஒரு விசேட கருத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக இதன்போது ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
முழு நாட்டையும் நச்சுத்தன்மையற்ற ஒரு நாடாக மாற்றி நாட்டையும் மக்களையும் ஆரோக்கியமான முறையில் கட்டியெழுப்பி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கு ஏற்றவகையில் நச்சுத்தன்மையற்ற ஒருநாடு மூன்று ஆண்டு திட்டம் 2016 மார்ச் மாதம் 07ஆம் திகதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. விவசாய நிலத்திற்குத் தேவையான நச்சுத்தன்மையற்ற உரங்களை உற்பத்திசெய்தல், பொருத்தமான நீர் முகாமைத்துவ முறைமையை அறிமுகப்படுத்தல், நவீன இயந்திரங்கள், அறுவடைத் தொழிநுட்பங்கள், அறுவடைகளை நச்சுத்தன்மையற்ற முறையில் களஞ்சியப்படுத்தல், விவசாயிகளிடத்திலிருந்து நியாயமான விலைக்கு அறுவடைகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் இதன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது. பீடைக்கொல்லிகளை முழுமையாக தடைசெய்தல், இதுவரை நடைமுறையில் இருந்துவந்த இரசாயன மானியத்தை விவசாய மானியமாக மாற்றி விவசாய சமூகத்தின் கைகளில் பணத்தை வழங்குதல், நச்சுத்தன்மையற்ற உர உற்பத்தியை விரிவுபடுத்தல், நாடு பூராகவும் நச்சுத்தன்மையற்ற விவசாய நிலங்கள் தொடர்பாக முன்மாதிரியை ஏற்படுத்தல், தேசிய விதைவகைகளை அறிமுகப்படுத்தல், நச்சுத்தன்மையற்ற உணவுப் பயன்பாட்டை முன்மாதிரியாக ஆக்குதல் ஆகியன இத்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அம்சங்களாகும்.
நச்சுத்தன்மையற்ற நாடு 2016 பெரும்போகத்தின் போதான நிகழ்ச்சித்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு மகவலி பீ, வளவை விடேச வலயம், திருகோணமலை ஆகியன தெரிவுசெய்யப்பட்டுள்ளன. சங்கைக்ககுரிய அதுரலியே ரத்ன தேரர் அவர்களும் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016.09.08