நச்சுத்தன்மையுள்ள கிருமிநாசினிகளுக்குப் பதிலாக மாற்று வழிகளை கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி

250

மக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் நச்சுத்தன்மையுடன் கூடிய கிருமிநாசினிகள், பீடைக்கொல்லிகள் தொடர்பில் மாற்று வழிமுறைகளை கண்டறிவதற்கு விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். நேற்று (07) பிற்பகல் தாமரைத் தடாகம் கலையரங்கில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டு விஞ்ஞான தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கிருமிநாசினிகள் மற்றும் பீடைகொல்லிகளின் காரணமாக இன்று நாட்டில் அப்பாவி மக்கள் முகங்கொடுத்துள்ள சிறுநீரக நோய் ஒரு தேசம் என்ற ரீதியில் நாம் முகங்கொடுத்துள்ள ஒரு பாரிய அனர்த்தமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்நிலைமையிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்கள் குறித்து இதுபோன்ற மாநாடுகளில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

மேலும் தமது ஆராய்ச்சி, அறிவு திறன்கள், அனுபவங்களை பயன்படுத்தி நாட்டின் தேசிய உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வறுமை இல்லாத ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் நிகழ்ச்சிதிட்டத்தில் விஞ்ஞானிகளினதும் தொழில்நுட்பவியலாளர்களினதும் பங்களிப்பானது மிக முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்டார்

“நிலையான தேசிய அபிவிருத்திக்கு விஞ்ஞான தொழில்நுட்பத்தையும் புதிய உற்பத்திகளையும் பயன்படுத்தல்” என்ற கருப்பொருளில் நேற்று ஆரம்பமான இம்மாநாடு இரண்டு நாட்கள் கொழும்பில் நடைபெறும் உள்நாட்டு வெளிநாட்டு விஞ்ஞானிகள் சுமார் 1000 பேர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்வதோடு, உலக புகழ்பெற்ற சுமார் 150 விஞ்ஞானிகளும் இதில் கலந்துகொள்கின்றனர். எமது நாட்டு இளம் விஞ்ஞானிகள் வெளிநாட்டு விஞ்ஞானிகளுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் அவர்களது அறிவை மேலும் வளர்த்துக்கொள்ளவும் அதனை நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்காக பயன்படுத்திக்கொள்வதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இந்த மாநாட்டின் பிரதான உரையை கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான தொழில்நுட்பத்துறை பேராசிரியர் மைக்கல் ஜே கெலி (Michqel J.kelly) அவர்கள் நிகழ்த்தினார். அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, மஹிந்த சமரசிங்க, ரவுப் ஹக்கீம், அர்ஜூன ரணதுங்க, ரஞ்சித்சியம்பலாப்பிட்டிய, சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனிவிரத்ன, விஞ்ஞானதொழில்நுட்பத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.விஜயலக்ஷமி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து விஞ்ஞான தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொள்ளும் உள்நாட்டு வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கான ஒரு விசேட இராப்போசன விருந்து ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் வெளிநாட்டு விஞ்ஞானிகள் 07 பேர்களுக்கு ஜனாதிபதி அவர்களினால் இதன்போது விருதுகள் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2016.09.08

2

SHARE