தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை (அக்.1) சென்னையில் தொடங்குகிறது.
2015-18-ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்ய தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியினரும், நடிகர் நாசர் தலைமையிலான அணியினரும் இந்தத் தேர்தலில் களம் காண உள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் போட்டி நிலவி வருவதால் திரைப்பட வட்டாரம் தவிர்த்து பொதுமக்கள் மத்தியிலும் இந்தத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் செயல்பட்டு வரும் நாடக அமைப்புகள் மற்றும் திரைப்பட அமைப்புகளை இரு தரப்பினரும் தனித் தனியாக நேரில் சென்று சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இந்தத் தேர்தலின் முதல் கட்டமாக வேட்பு மனு தாக்கல் சென்னையில் வியாழக்கிழமை (அக்.1) காலை தொடங்குகிறது. சென்னை தியாகராய நகர், ஹபிபுல்லா சாலையில் இயங்கி வரும் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை வரும் 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம்.
அக்டோபர் 8-இல்… இறுதி வேட்பாளர் பட்டியலை வரும் 8-ஆம் தேதி மாலை, தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன் வெளியிடவுள்ளார்.
சென்னை மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் வரும் 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்குகிறது.