
நடிகர் சங்க வளாகத்தின் அருகில் வசிப்போர், தங்களின் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்குத் தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் சங்கத்தில் கட்டடம் கட்டும் பணி பரபரப்பாகவும், படுவேகமாகவும் நடந்து வருகிறது.
உங்கள் கட்டடம் கட்டுவதற்குத் தடை கேட்டுள்ள நிலையில் நீங்கள் பில்டிங் கட்டுவது எப்படி’ என்று நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கேட்டோம். ”எங்கள் வளாக கட்டடத்தின் மீது வழக்குத் தொடுத்தவர்கள் வழக்கில் உண்மை இருக்கிறதா என்பதைக் கண்டறிய சமீபத்தில் அவர்களைக் கோர்ட்டு விசாரணைக்கு அழைத்தது.
அப்போது சென்னை மாநகராட்சிக்கு இந்த கட்டடம் சொந்தமானதா என்பது குறித்த ஆதாரத்தை அவர்கள் காட்டவில்லை. அதனால் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நடிகர் சங்கத்தில் கட்டடம் கட்டும் பணியை நிறுத்தச் சொல்லி எங்களுக்கு எந்தவிதத் தடையும் கிடையாது. அதனால் நாங்கள் திட்டமிட்டபடி கட்டடப் பணியில் வேகமாக இயங்கி வருகிறோம்” என்று பதில் அளித்தார்.