நடிகர் திலீப்பின் சொத்து மதிப்பு 600 கோடி

222

மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஆலுவா சப் ஜெயிலில் உள்ள நடிகர் திலீப்பின் சொத்துகள் குறித்த விசாரணை தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக மத்திய பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த விசாரணையில் நடிகர் திலீப் சுமார் 600 கோடி வரை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு கலைநிகழ்ச்சிகளுக்காக நடிகர் திலீப் தலைமையில் ஒரு குழு செல்வது வழக்கம். இந்தப் பயணத்தின்போதுதான் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் இருந்து இந்த முதலீட்டைப் பெற்று வந்ததைப் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நடிகர் திலீப் பினாமி பெயரில் பல நிலங்களை வாங்கிக் குவித்திருக்கிறார். இதுபோல் முதல் மனைவி மஞ்சுவாரியர், இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் மற்றும் உறவினர்கள் பெயரிலும் சொத்துகள் அதிகமாக வாங்கியுள்ளார். இது தவிர போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்களை ஆக்ரமித்துள்ளதாகவும் புகார்கள் தற்போது எழுந்துள்ளன. கேரள சாலக்குடியில் ஒரு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்ரமித்து ‘டி சினிமாஸ்’ என்ற மல்டி பிளக்ஸ் தியேட்டரை கட்டியுள்ளார் என புகார் வந்ததைத் தொடர்ந்து திருச்சூர் மாவட்ட கலெக்டர் கௌசிகன் தீவிர விசாரணையை நடத்தி வருகிறார். நடிகர் திலீப்புக்கு, வரவுக்கு மீறி அதிகமாக சொத்துகள் இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE