
ஒரு அடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நூரின் ஷெரீப். இந்த படம் வெளியாவதற்கு முன்னர் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியின் கண்ணசைவு மூலம் பிரியா பிரகாஷ் வாரியர் தான் பிரபலமாக இருந்தார். புருவங்களை உயர்த்தி கண்ணடிக்கும் அவரது வீடியோ மிகப்பெரிய வைரலானது.
ஒரு அடார் லவ் படம் வெளியான பிறகு நூரின் ஷெரீப் தான் பெரிதும் பேசப்பட்டார். படத்தில் அவரது நடிப்பும், கதாபாத்திரமும் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டது. இதனால் பிரியாவை விட நூரின் அதிக பட வாய்ப்புகளை பெற்றார். திரையில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் நூரின் ஷெரீப் ஒரு துடிப்பான பெண்.
பையன்களை போல் பைக் ஓட்டுவது, துறுதுறுவென ஏதாவது சேட்டை செய்வது, ஆண் நண்பர்களுடன் சகஜமாக ஊர் சுற்றுவது என மிகவும் ஜாலியான கேரக்டர் கொண்டவர். இந்நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி எனும் இடத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் நூரின் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக வந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள், நூரின் ஷெரீப் வந்தபோது ரகளையில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரசிகரின் கை நூரினின் மூக்கில் பலமாகபட்டது. இதனால் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் மேடையிலேயே நூரின் கதறி அழுதார்.

ரசிகர்கள் தாக்கியதில் நூரினின் மூக்கில் லேசான காயம் தான் ஏற்பட்டது. ஆனால் வலி கடுமையாக இருந்ததால் அவர் கதறி அழுதுவிட்டதாக நூரினின் தாய் கூறியுள்ளார். நிகழ்ச்சிக்கு நூரின் வந்தபோது, சிலர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நூரின் மூக்கில் ரத்தம் கொட்டுவது அவர் கதறி அழுவது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.