மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான முன்னாள் கார் டிரைவர் சுனில் குமார் கொச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபல நடிகை ஒருவர் திருச்சூரில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இரவில் கொச்சி திரும்பிய போது அவரது காரிலேயே கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் 2 மணி நேரத்திற்கு பின்னர் அவரை விட்டு தப்பிச் சென்றனர். தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அந்த நடிகை புகார் தெரிவித்தார்.
நாடுமுழுவதும் ஊடகங்களில் இந்த செய்தி வெளியான உடன் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக டிரைவர் மார்ட்டினை கைது செய்தனர்.
மேலும் கோவையில் பதுங்கி இருந்த சுனிலின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சுனில் அவரது கூட்டாளிகள் மணிகண்டன், விஜேஷ் ஆகிய 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.
பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நடிகையின் முன்னாள் கார் டிரைவர் சுனில்குமார் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று கொச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.