சிறையில் இருந்தபடி நடிகை ராதாவை செல்போனில் மிரட்டிய பிரபல ரவுடியின் வாட்ஸ் ஆப் ஓடியோ வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு பைசூல் என்ற தொழில்அதிபர் மீது நடிகை ராதா பொலிசில் புகார் மனு கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், பைசூல் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பலமுறை உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டதாகவும், இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் கடந்த 6 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக பிரமுகரின் மனைவி உமாதேவி என்பவர் ராதா மீது பொலிசில் புகார் அளித்தார்.
அதில், ராதா தன் கணவரை தன்னிடம் இருந்து பிரிக்கப் பார்ப்பதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
உமாதேவின் கணவர் முனிவேல் அதிமுகவை சேர்ந்தவர் என்றும் அவர் தற்போது கோடம்பாக்கம் வட்ட துணை செயலாளராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், தன் மீதான இந்தப் புகாரை நடிகை ராதா மறுத்தார்.
இந்நிலையில், சிறையில் உள்ள பிரபல ரவுடி வைரம் தன்னை போன் மூலம் மிரட்டுவதாக ராதா புகார் தெரிவித்துள்ளார்.
ராதாவை ரவுடி வைரம் மிரட்டும் ஓடியோ வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவி வருகிறது. மேலும், வைரத்தின் இந்த மிரட்டலால் தனது உயிருக்கு ஆபத்து என்றும் புழல் சிறையில் இருக்கும் ஒருவர் செல்போனில் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.
ஏற்கனவே 8க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கியுள்ள வைரம் மீது கடந்த மாதம் குண்டர் சட்டம் பாய்ந்தது. தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைரம் எப்படி செல்போனில் பேசினார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.