நடுக்கடலில்  நடந்தது என்ன?

206

வழக்கம்போல் மீன் பிடிக்கக் கிளம்புவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிய மீனவர் பிரிட்ஜோ, மறுநாள் சடலமாகத்தான் ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்துக்கு வந்தார். பிரிட்ஜோவுக்கு வயது 22.

இன்னும் திருமணம் ஆகவில்லை. ஒவ்வொரு நாளும், ‘பார்த்துப் போயிட்டு வாப்பா’ என்று அறிவுரை சொல்லி வழியனுப்பும் பெற்றோரிடம், ‘‘இப்போலாம் அந்தப் பிரச்னை கிடையாதும்மா… பயப்படாதீங்க’’ என்று சொல்லிவிட்டுத்தான் கிளம்புவாராம் பிட்ஸோ.

கடைசியாக, 2011-ல்தான் நாகப்பட்டினம் வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர், இதேபோல் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

அதற்குப் பிறகு உயிர்ப் பலி இல்லையென்றாலும்… காயத்தோடும், படகுகள் பறிக்கப்பட்டு வெறுங்கையுடனும் மீனவர்கள் திரும்பும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துகொண்டுதான் இருந்தன. இப்போது பிரிட்ஜோவின் கொலை, தமிழக மீனவர்கள் மத்தியில் பேரலையை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், தங்களுடன் வந்து தீவைச் சுற்றிப்பார்த்துவிட்டு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் உறுதியளித்த பிறகுதான் பிரிட்ஜோவின் சடலத்தை வாங்குவோம்’ என்று போராட்டத்தில் குதித்துவிட்டனர்.

அதேபோல், இதற்குக் காரணமான ஸ்ரீலங்காவின் கடற்படையைச் சேர்ந்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் போராடுகின்றனர் மீனவர்கள்.

விஷயம் இப்படிப் போய்க்கொண்டிருக்க, ஸ்ரீலங்கா கடற்படையின் அதிகாரி கமாண்டர் சமிந்தா வாலகுளுகே, ‘‘இந்தக் கொலைக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.’’ என்று பல்டி அடித்து பேட்டி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று காலை தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘இறந்ததாகச் சொல்லப்படும் நபருக்கு புல்லட் காயம் எப்படி வந்தது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் இந்திய அதிகாரிகளிடம் தொடர்பில்தான் இருக்கிறோம்.

இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் எங்களையே குற்றம் சாட்டுவது வாடிக்கையாகி விட்டது. எங்கள் படகிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தவோ, வேறு விஷயங்களுக்கோ எங்களுக்கு அரசு அனுமதி இல்லை.

சொல்லப் போனால், எங்கள் படகில் துப்பாக்கிகளே கிடையாது. இந்திய மீடியாக்களில்தான் இதுபோன்ற தவறான செய்திகள் வருகின்றன. எங்களைப் பொறுத்தவரை, சுடுவதற்கு அதிகாரம் இல்லை.

அவர்களைக் கைது செய்து, படகுகளை சீஸ் பண்ணுவது மட்டும்தான் எங்கள் வேலை. அதுவும் பார்டரை க்ராஸ் செய்தால் மட்டும்தான்!” என்று சொல்லியிருக்கிறார் வாலகுளுகே.

இதைக் கேள்விப்பட்டதும் கொதித்தெழுந்து விட்டார்கள் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள். ‘‘அவங்க பொய் சொல்றாங்க; நடந்தது என்னனு நான் சொல்றேன்!’’ என்றார், இறந்துபோன பிரிட்ஜோவின் சித்தப்பா ஜஸ்டின்.

‘‘மார்ச் 6-ம் தேதி 5.55-க்குத்தான் போட் கிளம்பினது. மொத்தம் 6 பேர் கிளம்பினாங்க. ரெண்டு படகு. அதுல ஒண்ணுலதான் பிரிட்ஜோ இருந்தான்.

நைட் கடல்ல ரொம்ப இருட்டா இருக்கும். எப்பவுமே நாங்க நைட் படகுல போகும்போது, விளக்கு போட்டுக்கிட்டுத்தான் போவோம். அப்போதான் ஸ்ரீலங்கா காரங்களுக்கு நாங்க என்ன பண்றோம்னு தெரியும். லைட் போடாமப் போனவங்களைக் கண்மூடித்தனமா சுட்ட சம்பவம்லாம் இருக்கு.

9 மணி இருக்கும். அப்போ திடீர்னு 10 பைக்ல நேவி ஆஃபீஸர்ஸ் வந்து எங்க படகைத் துரத்த ஆரம்பிச்சாங்க. நாங்களும் பதற்றத்துல வலையை அறுத்துட்டு படகை ஓட்டினோம். இத்தனைக்கும் நாங்க நம்ம நாட்டு எல்லைக்குள்ளேயேதான் படகை விரட்டினோம்.

திடீர்னு அவங்க எங்களைச் சுத்தி வளைச்சு துப்பாக்கி எடுத்துச் சுட ஆரம்பிச்சுட்டாங்க. பயந்து போன எல்லாரும் உள்ள ஒளிஞ்சுக்கிட்டாங்க. கொஞ்ச நேரம் துப்பாக்கிச் சத்தம் கேட்கலைன்னதும், அவங்க போயிட்டாங்களான்னு பார்க்க பிரிட்ஸோ எந்திரிச்சான்.

அந்த நேரம் பார்த்து குறி வெச்சு அவனோட கழுத்துல சுட்டாங்க நேவிகாரங்க! அப்போ டிரைவர் ஜரோன், பதற்றமா எங்க மீனவர் சங்கத் தலைவருக்கு போன் பண்ணிச் சொன்னார். படகு ஓடிக்கிட்டேதான் இருக்கு. தப்பிக்கவே முடியலை. கோஸ்ட் கார்டு வந்தா மட்டும்தான் காப்பாத்த முடியும். உடனே கோஸ்ட்கார்டுக்குத் தகவல் சொன்னார் தலைவர். அவங்க எடுக்கவே இல்லை.

அப்புறம் ஒருவழியா அவங்களே போன் பண்ணிக் கேட்டு, அவங்க வர்றதுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு! 55 நிமிஷம் உயிரோட இருந்துருக்கான் பிரிட்ஸோ. கோஸ்ட்கார்டு கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தாகூட காப்பாத்தி இருக்கலாம்!’’ என்று ஸ்பாட் ரிப்போர்ட் கொடுத்தார்.

நம் ஊரில் மட்டும்தான் மீன் பிடிக்கச் சென்றால், மீன்களுக்குப் பதில் மீனவர்கள் குறையும் சம்பவம் நடக்கிறது. 5 லட்சம் உதவித்தொகை கொடுப்பதோடு நின்றுவிடாமல், மீனவர்கள் பிரச்னையில் அரசு தலையிட்டால் நல்லது.

SHARE