நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழீழம் மலர கடமையாற்றுவோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலாளர் வை.கோபாலசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் உலகளாவிய மாநாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில், ஜேர்மனியில் ஒக்டோபர் 10ம் திகதி நடைபெறுகின்றது.
இதற்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கதின் உலகளாவிய மாநாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில், ஜேர்மனியில் ஒக்டோபர் 10ம் நாள் நடைபெற இருக்கின்ற செய்தி அறிந்து மகிழ்கிறேன்.
1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது, தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ் அறிஞர்களால் நிறுவப்பெற்ற இந்த அமைப்பு, உலகின் பல நாடுகளில் கிளை பரப்பி, தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமைக்கும், தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கும் கடமை ஆற்றி வருவது பாராட்டுக்கு உரியது.
உலகின் தொன்மைப் பழங்குடிகளாகிய நம் முன்னோர்கள், கலம் செலத்திக் கடல் கடந்து உலகின் பல நாடுகளோடு வாணிபம் செய்தார்கள். படை நடத்தி வாகை சூடினார்கள். தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமையைப் பாருக்குப் பறைசாற்றினார்கள்.
ஆனால் இன்றைக்குச் சிங்களப் பேரினவாதத்தின் இனப்படுகொலைத் தாக்குதலுக்குள்ளாகிய நீங்கள் பல நாடுகளில் பரவி இருக்கின்றீர்கள். இதுபோன்ற மாநாடுகளில் கூடுவதன் மூலமாக தமிழ் இனத்தின் ஒற்றுமையைப் பறை சாற்றுகின்றீர்கள்.
ஐ.நா மன்றத்தில் அமெரிக்கத் தீர்மானம் உள்ளிட்ட எத்தனையோ துரோகங்களை எதிர்கொண்டு இருக்கின்ற வேளையில் இம்மாநாடு நடைபெறுகின்றது.
நம்பிக்கை இழக்க வேண்டிய தேவை இல்லை. நம்மால் முடியும் என்ற உறுதியோடு தமிழ் ஈழம் மலரக் கடமை ஆற்றுவோம். அதற்கு உறுதி பூணும் வகையில் மாநாடு வெற்றி பெறட்டும்.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய இதய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.