நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடியாக உயர்ந்துள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நயன்தாரா 2005-ல் கதாநாயகியாக அறிமுகமாகி 10 வருடங்களுக்கு மேலாக நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது படங்கள் குறையும் என்று கணித்தனர். அதனை பொய்யாக்கினார். திரிஷா, பிரியாமணி, ஸ்ரேயா உள்ளிட்ட பல சம காலத்து நடிகைகள் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார்.
தற்போது அதிக படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன் உள்ளிட்ட நடிகைகளாலும் கூட நயன்தாராவை எட்டிப்பிடிக்க முடியவில்லை. சினிமாவில் அறிமுகமான புதிதில் நயன்தாராவின் சம்பளம் 40 மற்றும் 50 லட்சங்களாக இருந்தன. சில படங்களிலேயே அது ரூ.1 கோடியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
தெலுங்கிலும் பெரிய ஹீரோக்களுடன் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த படங்கள் வசூல் குவித்தன. ‘மாயா’ படத்தில் பேய் வேடத்திலும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காது கேளாத பெண்ணாகவும் வந்தார். தனி ஒருவன், இது நம்ம ஆளு படங்களும் நன்றாக ஓடின. இதனால் அவரது சம்பளம் ரூ.3 கோடியை எட்டியது. விக்ரமுடன் நடிக்கும் இருமுகன், கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா, ஷீவாவுடன் நடிக்கும் திருநாள் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நடிகைகள் வாங்கும் அதிக பட்ச சம்பளம் ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நயன்தாராவை அணுகி முன்னணி கதாநாயகனுடன் ஜோடி சேர கால்ஷீட் கேட்டதாகவும் அந்த படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி கேட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த தொகையை கொடுத்து நயன்தாராவை ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு நடிகையை தேர்வு செய்வதா? என்று தயாரிப்பாளர் யோசனையில் இருக்கிறார்.