நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உயர் திருவிழா

621

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உயர் திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு வரும் பக்தர்களுக்கான சகல வித தேவைகளையும் தங்குதடையின்றி வழங்க அனைத்துத் தரப்பினரும் நேற்று நயினாதீவில் கூடி ஆராய்ந்துள்ளனர்.

இதில் பிரதேச செயலகம், பிரதேச சபை, காவல்துறை, கடற்படை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம், குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவையில் ஈடுபடும் படகு உரிமையாளர்கள் மற்றும் ஆலய அறங்காவலர்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் வருடா வருடம் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்துத் தேவைகளும் இந்த வருடமும் எதுவித தடையுமின்றி அமுல்படுத்தப்படும் என அனைத்துத் தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பாதைக்கும் படகுகளுக்கும் இடையில் உள்ள நேரத்தை ஒழுங்குபடுத்துமாறு படகு உரிமையாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளை படகு உரிமையாளர்கள் கடற்படையினருடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கடற்படைத் தரப்பால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதேநேரம் பச்சை குத்துபவர்களுக்கு இங்கு அனுமதி இல்லை எனவும் இவ்வாறு பச்சை குத்திக் கொள்வதால் நோய்த் தாக்கம் ஏற்படுவதாகவும் தெரிவித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள், இதற்கு பொலிஸ் தரப்பு தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இதேவேளை கடந்த காலங்களை விட இவ் வருடம் சுகாதாரம், குடிநீர் போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகள் சிறப்பான முறையிலும் வெகு விரைவாகவும் முன்னெடுக்கப்படும் என வேலணை பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

மேற்படி கலந்துரையாடல் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய கேட்போர் கூடத்தில் நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணிவரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

 

SHARE