ஊக்கமருந்து கலந்தது தெரியாமலே நர்சிங் யாதவ் உணவு உட்கொண்டுள்ளார். எனவே அவரை ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்று தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நர்சிங் யாதவ், ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி கிடைத்துள்ளது.
ஒலிம்பிக்கில் ஆடவர் 74 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தகுதிச்சுற்றின் மூலம் தகுதி பெற்றார். ஆனால் தகுதிச்சுற்றில் பங்கேற்காதவரான சுஷீல் குமார், தான் ஏற்கெனவே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்றிருப்பதால் 74 கிலோ எடைப் பிரிவில் தன்னையே ஒலிம்பிக்கிற்கு அனுப்ப வேண்டும் என அடம்பிடித்தார். நீதிமன்ற படியேறிய இந்த விவகாரத்தில் நர்சிங் யாதவுக்கு பச்சை கொடி காட்டப்பட்டது. இந்த நிலையில் திடீரென நர்சிங் யாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது குறித்து நர்சிங் யாதவ் கூறுகையில், “எனக்கு எதிராக சதி நடந்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருள்களை நான் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். எனது உயிருக்கே ஆபத்து இருப்பதாக சிஐடி அறிக்கை தெரிவிக்கிறது. நான் ஒலிம்பிக்கிற்கு செல்வதை தடுப்பதற்காக பல்வேறு சதிகள் செய்யப்பட்டுள்ளன ‘ என்றார். நர்சிங் யாதவின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் அவருக்குப் பதிலாக மாற்று வீரராக பர்வீன் ராணாவின் பெயரை அறிவித்தது இந்திய மல்யுத்த சம்மேளனம். அதற்கு சர்வதேச மல்யுத்த சம்மேளனமும் ஒப்புதல் அளித்தது.
இது தொடர்பான விசாரணைக்கு ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நாடா கமிட்டி) முன்பு தனது வழக்கறிஞர்களுடன் நர்சிங் யாதவ் ஆஜரானார். மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்திய நாடா கமிட்டி, தனது தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.
நர்சிங் யாதவ் மீது தவறு இல்லை. அவர் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை. தேசிய விளையாட்டு ஆணையம் வழங்கிய உணவில் ஊக்கமருந்து இருந்தது. ஊக்கமருந்து கலந்தது தெரியாமலே உணவு உட்கொண்டுள்ளார். எனவே நர்சிங் யாதவை ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்று இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நர்சிங் யாதவ், ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி கிடைத்துள்ளது.