கல்முனை – நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் தேவஸ்தானம் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஆலயத்தின் மஹோற்சவத்திற்கான ஆரம்ப கரும பூசைகள் இடம்பெற்றதும் சுபவேளையில் கொடியேற்றப்பட்டு சுவாமி வெளி வீதி வலம்வந்ததும் கொடியேற்ற உற்சவ பூசைகள் நிறைவடைந்தன. கொடியேற்ற உற்சவத்தின்போது பக்தர்கள் வருகைத்தந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
நடைபெறும் ஸ்ரீ கணேசர் தேவஸ்தான திருவிழாக்களில் எதிர்வரும் 03.09.2016 சனிக்கிழமை மாம்பழ திருவிழா, மறுநாள் வேட்டைத் திருவிழா, திங்கள் கிழமை சுவாமி ஊர்வலம் என்பன சிறப்புப் பெற்ற விசேட உற்சவங்களாக நடைபெறவுள்ளன.
திருவிழா காலங்களில் தேவஸ்தானத்தில் கூட்டு வழிபாடு, நற்சிந்தனை என்பன நடைபெறவுள்ளது.
கொடியேற்ற உற்சவத்தினைத் தொடர்ந்து 10 நாட்களைக் கொண்ட கணேசர் தேவஸ்தான உற்சவப் பெருவிழாவானது எதிர்வரும் 06.09.2016 செவ்வாய்க் கிழமை சமுத்திர தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.