சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சியின் கட்டளைகளுக்கு தலையசைக்கும் கை பொம்மையாக செயற்பட்டு வருவதாக லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரண குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள லங்கா சம சமாஜக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டை நிர்வகிக்கின்ற நாடாளுமன்றத்தின் தலைவர் தற்போதைய நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகவே காணப்படுகின்றார். சபாநாயகர் கரு ஜயசூரிய பெயரளவில் மட்டுமே சபாநாயகராக இருந்து வருகின்றார்.
கடந்த ஆட்சியில் ஒரு போதும் நாடாளுமன்றம் சுயாதீனமாக செயற்பட்டது கிடையாது. எமது ஆட்சியில் சபாநாயகராக இருந்த சமல் ராஜபக்ஷ ஒருபோதும் பக்கசார்பாக செயற்பட்டதில்லை. தற்போதைய ஆட்சியில் கல்வி தனியாருக்கு விற்கப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிகளவான வற் வரியை சுமத்தி நாட்டை பாதாளத்தில் தள்ள அரசு முயற்சிக்கிறது.
இவ்வாறான செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதன்படி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக, வடக்கு, கிழக்கை இணைத்துக் கொண்டு தேசிய கறுப்புக் கொடி போராட்டமொன்று மிக விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர குறிப்பிட்டார்.