நல்லாட்சி அரசின் வரவு செலவுத் திட்டம் மீது டிசம்பர் இறுதியில் வாக்கெடுப்பு

77

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜட்டை நவம்பர் 8ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீர சபையில் முன்வைப்பார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், விவாதத்துக்குரிய கால எல்லையைக் கருதியே 5 நாட்களுக்கு முன்னரே வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முதல்நாளன்று நீதி அமைச்சரின் உரை மாத்திரமே இடம்பெறும். மறுநாள் முதலே ஆளும், எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைப்பார்கள்.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் முடிவடைந்த பின்னர் குழுநிலை விவாதம் (மூன்றாம் வாசிப்பு) ஆரம்பமாகும். அது நிறைவடைந்த பின்னரே இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் இறுதிநேரத்தில் திகதி மாறக்கூடிய சூழ்நிலையும் இருக்கின்றது.

அதேவேளை, பட்ஜட் விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்படும். மருத்துவ மற்றும் அவசர தேவைகளின் நிமிர்த்தம் மாத்திரமே செல்லமுடியும்.

அதுவும் இறுதி வாக்கெடுப்பு தினத்தில் கட்டாயம் அவையில் இருக்கவேண்டும் என பிரதமரால் பணிக்கப்படும். பட்ஜட் நிறைவேறிய பின்னர் ஒரு மாத காலம் நாடாளுமன்றத்துக்கு விடுமுறை வழங்கப்படும்.

SHARE