நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் புதிய முயற்சி

228

நாட்டில் இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளின் முக்கியத்துவம் மிகவும் வலுவாக உணரப்பட்டு வருகிறது.

sampoor-ms-3

 நாட்டில் நிரந்தர மற்றும் நீடித்த அமைதியை ஸ்தாபிக்கவும் வளமான எதிர்காலத்தை அடையவும் மக்களுக்கிடையே நல்லிணக்கம் மிகவும் வலுவாக முன்னெடுக்கப்பட வேண்டியதுடன் தேசிய ஒற்றுமையும் உறுதிப்படுத்தப்படுவது அவசியமாகும்.

அப்போது தான் பன்முகத்தன்மைகளுடன் வாழ்கின்ற மக்கள் மற்றும் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி நம்பிக்கையை கட்டியெழுப்புவதுடன் நாட்டை வளமானதாக உருவாக்க முடியும்.

எனினும் இந்த நல்லிணக்கச் செயற்பாடுகளையும் தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்தும் வேலைத்திட்டங்களையும் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது தொடர்பில் தெளிவான திட்டமிடல்கள் அவசியமாகும்.

அந்த வகையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நாட்டின் பாடசாலைகளின் மாணவத் தலைவர்களில் தெரிவுசெய்யப்பட்டவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து அவர்களுடன் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடலை நடத்தியிருந்தனர்.

எப்போதுமில்லாதவாறான இந்த மிகவும் வரவேற்கத்தக்கதான முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது.

குறிப்பாக பிரதமரும் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் இந்த நிகழ்வில் மாணவத் தலைவர்களுடன் மிகவும் அந்நியோன்னியமாக கலந்துரையாடியதுடன் வளமான எதிர்காலம் தொடர்பான கருத்துக்களையும் யோசனைகளையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நல்லிணக்கத்தை பாடசாலைகளூடாக ஏற்படுத்துவதே மிகவும் சிறந்ததாக அமையுமென தெரிவித்திருந்தார்.

அத்துடன் வடக்கிலுள்ள மாணவர்கள் சிங்களம் கற்பதற்கு ஆசிரியர்களைப் பெற்றுத்தருமாறு கோருகின்றனர். அதேபோன்று தெற்கிலுள்ள மாணவர்கள் தமிழ்மொழி கற்பதற்கு ஆசிரியர்களை பெற்றுத் தருமாறு கோருகின்றனர்.

எனவே இது ஒரு சிறந்த நிலைமையாகும். நல்லிணக்கத்துடன் எமது தேசத்தை வெற்றிகொண்டால் மாத்திரமே எம்மால் சர்வதேசத்தை வெற்றி கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி இந்த நிகழ்வில் தெரிவித்திருந்தார்.

மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டியுள்ளது. அந்த வகையில் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் மாற்றத்திற்கு நாம் ஒத்துழைப்பை வழங்குவோம். தற்போதைய மாணவர்களாகிய எதிர்கால தலைவர்கள் தங்களது போட்டியை வகுப்பறைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது. அவற்றை சர்வதேசம் வரை முன்னெடுக்க வேண்டும்.

மாணவத் தலைவர்கள் என்ற வகையில் நாட்டின் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை அறிந்து வைத்திருப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

மாணவர்கள் தமது கல்வியை பாடவிதானங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அதற்கு அப்பால் சென்று சமூகத்துடன் அந்நியோன்னியமாக செயற்படவேண்டும். பாடசாலைப் பரீட்சைகளில் வெற்றியடையும் சில மாணவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைவதைக் காண்கின்றோம்.

எனவே பரீட்சையில் மாத்திரமன்றி வாழ்க்கையிலும் வெற்றிபெறவேண்டும். தம் முன்னால் வருகின்ற அனைத்து சவால்களையும் வெற்றி கொள்வதற்கு மாணவர்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி மாணவத் தலைவர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் வகையில் தெரிவித்திருக்கின்றார்.

வடக்கு, கிழக்கு, தெற்கு என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருந்த பாடசாலை மாணவத் தலைவர்கள் மத்தியில் சிறப்பான அறிவுரையை வழங்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியிருக்கிறார்.

விசேடமாக, மாணவர்கள் வகுப்பறைக்குள்ளும் பாடவிதானத்திற்குள்ளும் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் சமூக விடயங்களில் அக்கறை கொள்ள வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமையும் நல்லிணக்கமானது பாடசாலைகளிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளமையும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

இதேவேளை இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாடசாலை மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், மாணவ தலைவர்களுக்கான மத்தியஸ்த நிலையங்களை உருவாக்கவுள்ளதாகவும் உறுதியளித்திருக்கின்றார்.

மாணவத் தலைவர்கள் இல்லையென்றால் பாடசாலை நடவடிக்கைகளை கொண்டுசெல்வது கடினமாகும். பாடசாலைகளில் மாணவத் தலைவர்களின் சேவை அளப்பரியதாகும். நானும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த நாட்டில் இலவசக் கல்வியினால் உருவாக்கப்பட்டவர்கள். அந்த வகையில் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே எமது நோக்கமாகும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நாட்டில் நல்லிணக்கச் செயற்பாடுகளை தேசிய ஒற்றுமையை முன்னெடுப்பதில் பாடசாலைகளின் வகிபாகம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். பாடசாலைக் காலத்தில் மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் பலப்படுத்துமிடத்து நாட்டின் எதிர்காலம் நிச்சயம் ஆரோக்கியமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அந்தவகையில் கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தின் தலைவர்கள் மிகவும் முக்கியமான புதிய முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளமையை வரவேற்கத்தக்கதாகும்.

30 வருடங்களாக யுத்தம் நிலவிய எமது நாட்டில் இதற்குப் பின்னர் அவ்வாறானதொரு துரதிர்ஷ்டம் நிகழாது இருக்கவேண்டுமானால் பாடசாலை மட்டத்திலிருந்தே மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கச் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும்.

நல்லிணக்கச் செயற்பாடுகளின் முக்கியத்துவம், இனங்களுக்கிடையிலான தேசிய ஒற்றுமையின் அவசியம், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் தேவை என்பன தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு அறிவூட்ட வேண்டியது அவசியமாகும்.

வடக்கு மற்றும் தெற்கு மாணவ சமூகங்களுக்கு இடையில் இவ்வாறு சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துக்கான அடிப்படையை ஏற்படுத்த முடியும்.

குறிப்பாக மாணவர்கள் தமது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தை பாடசாலையில் ஆரம்பிக்கின்றனர். அந்த வகையில் பாடசாலையில் அவர்கள் பெறுகின்ற விடயங்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக அமைகின்றன.

எனவே அவ்வாறு மாணவர்களின் ஆரம்ப நிலையை நிர்ணயிக்கும் பாடசாலைகளில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டங்கள் மிகவும் ஆழமான முறையில் முன்னெடுக்கப்பட்டால் எதிர்கால தலைவர்களான மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை மிகவும் வலுவான முறையில் ஏற்படுத்த முடியும்.

1994ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தார்.

அவற்றில் பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அக்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும் அதன் பின்னர் நாட்டின் அரசியல் நிலைமையில் ஏற்பட்ட மாற்றங்களினால் அவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை.

எனினும் கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் இவ்வாறு நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்புக்கள் கிடைத்தன. ஆனால் எந்தவொரு மட்டத்திலும் அவற்றை வலுவான முறையில் முன்னெடுப்பதற்கு வேலைத்திட்டங்கள் கடந்த காலங்களில் இடம்பெறவில்லையென்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது பதவிக்கு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியில் இவ்வாறு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கப்படுகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.

குறிப்பாக பாடசாலை மாணவத் தலைவர்களை இலக்குவைத்து அரசாங்கம் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது அது முழுப் பாடசாலையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இறுதியில் நீண்டகாலத்தில் நாடுமுழுவதும் ஒரு ஆரோக்கியமான நல்லிணக்கமான சூழல் தோன்றுவதற்கு இந்த வேலைத்திட்டங்கள் ஏதுவாக அமையும்.

எனவே புதிய அரசாங்கத்தின் இந்த நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டியது அவசியமாகும்.

புதிய அரசாங்கம் பல்வேறு விடயங்களில் நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையை வெளிக்காட்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையை நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கான ஒரு சிறந்த உதாரணமாகக் கூறலாம்.

எனவே அரசாங்கம் தொடர்ச்சியாக நாட்டில் நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் பலப்படுத்தவும் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் இவ்வாறு பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சி வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

SHARE