நல்லூர் கந்தன் ஆலயத்தில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இம்முறை ஆலய சூழல் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா எதிர்வரும் 8ம் திகதி கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவுக்கான மாநகர சபையின் ஏற்பாடுகளை ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில்,
நல்லூர் மஹோற்சவ காலத்தில் ‘பிளாஸ்ரிக் அர்ச்சனைத் தட்டுக்களுக்கு பதிலாக பனையோலையில் தயாரிக்கப்பட்ட அர்ச்சனைத்தட்டுக்கள் விற்பனை செய்ய வேண்டும்.
அவற்றை மாவட்ட மகளிர் அமைப்புக் கள் ஊடாகவும், பனைசார் உற்பத்தியாளர்களிடமிருந்தும், குறைந்த விலைகளில் கடைக்காரர் கள் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைவிட, 20 மைக்றோவுக்கு குறைவான பொலித்தீன் பாவனை மற்றும் உக்கலடையாத பொரு ட்களின் பாவனை என்பனவும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களும், கடமையில் ஈடுபடுபவர்களுக்கு கலாசார உடைகளை அணிய வேண்டும்.
ஆலய வெளி வீதியில் அங்கப் பிரதட்சனை செய்வதற்காக கொட்டப்பட்டுள்ள மணலை அசிங்கம் செய்யாமல், சுகாதாரம் பேணவேண்டும்.
ஆலய சூழலில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக ஆங்காங்கே கண்காணிப்பு கமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஆலயத் சுற்றாடலையொட்டி அமைக்கப்படும் வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் சைக்கிள்களுக்கு 5 ரூபாயும், மோட்டார் சைக்கிள்களுக்கு 10 ரூபாயும் மாத்திரம் அறிவிட ப்படவேண்டும்.
மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.ஆலயத்தின் முக்கிய திருவிழாக் காலங்களில் ஆலயத்துக்குள் நுழையும் காவடிகள், வடக்கு வீதிப்பக்கமாக நுழைந்து, குபேர வாசலில் தங்கள் நேர்த்திக் கடனை முடித்த பின்னர், கோவில் வீதி வழியாக தெற்கு பக்கமாக வெளியேற வேண்டும்.
ஆலயத்தை சூழ அமைக்கப்படும் வீதித்தடைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி பிற்பகல் 2 மணியுடன் அமுலுக்கு வருகின்றது. ஆலயச் சூழலில் கடைகள் அமைத்தவர்கள் தங்கள் பொருட்களை இடமாற்றுவதற்காக மாத்திரம் மதியம் 12 மணி முதல் 2 மணிவரையில் பாதை திறக்கப்படும்.
மேலும், அப்பகுதியில் குடியிருப்பவர்கள், கடைகள் வைத்திருப்பவர்கள், அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு, சென்று வருவதற்கு விசேடமான அடையாள அட்டை வழங்கப்படும் என்றார்.