1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் திகதி நாகர்கோவில் மகா வித்தியாலய கட்டிடத்தின் மீது இலங்கை விமானப்படையின் புக்காரா விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் 21 மாணவர்கள் அவ்விடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
அந்த கோர நிகழ்வின் 21வது ஆண்டு நிறைவு இன்றாகும். அதன் நினைவாக இன்றைய தினம் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் பலியான மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.
அந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வியமைச்சர் குருகுலராசா அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொள்கின்றார்.
மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்றைய அந்த நிகழ்வில் பலியான மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பிள்ளைகளின் நினைவாக உருவப்படங்களுக்கு மாலை அணிந்து, தீபமேற்றி அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் விமானத்தாக்குதலில் பலியான மாணவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தை கடந்த வருடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.