நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைப்பதாக கிளிநொச்சி வனவளத் திணைக்க அதிகாரி ஜெயசந்திரன்

207

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பல மாதங்களுக்கு பின்னர் தன்மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைப்பதாக கிளிநொச்சி வனவளத் திணைக்க அதிகாரி ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வனவளத் திணைக்கள அதிகாரி என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து கைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார்” என பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேற்று முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாகவே கிளிநொச்சி வனவளத் திணைக்க அதிகாரி ஜெயசந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“கடந்த வருடம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ஊற்றுப்புலத்தில் நிற்பதாகவும், அங்கு மீள் குடியேறியுள்ள மக்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட வருமாறும் சிறீதரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்போது நானும் எனது உத்தியோகத்தர்கள் இருவரும் அங்கு சென்றோம். அப்போது அடர்ந்த காட்டுக்குள் மீள் குடியேற்றப்பட்ட மக்களுடன் அவர் இருந்தார்.

அதன்போது குறித்த பிரதேசக் காணிகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பாக கலந்துரையாடியபோது,

இந்தப் பிரச்சினை தொடர்பில் எனக்கு முன்பு இருந்த அதிகாரிகளால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இடம்பெற்று வருகிறது. இது அடர்ந்த காடு இங்கு குடியேறுவது சட்டத்திற்கு புறம்பானது எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பொறுத்தே இனிச் செயற்பட முடியும் என நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் நான் துப்பாக்கியை காட்டவில்லை. அவ்வாறு துப்பாக்கியை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினரை அச்சுறுத்தியிருந்தால் அவரது மெய்ப் பாதுகாவலர்கள் அன்றே என் மீது துப்பாக்கி பிரயோகம் செய்திருக்க முடியும்.

அல்லது உடனடியாக பொலிஸ் நிலையத்திலோ அல்லது எனது திணைக்களத்தின் மேலதிகாரியிடமோ இது குறித்து முறையிட்டிருக்கலாம்.

ஆனால் இவற்றையெல்லாம் விடுத்து பல மாதங்களுக்கு பின்னர் இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை என் மீது சுமத்துவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறேன்” என கிளிநொச்சி வனவளத் திணைக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

SHARE