நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தொடர்பான வழக்கு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு இளைஞரொருவரை கடத்திச்சென்று, அவரை சட்டவிரோதமாக தடுத்து வைத்து அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கவுள்ளதால் குறித்த வழக்கை ஒத்திவைக்குமாறு நாடாளுமன்ற செயலாளரின் கோரிக்கை கடிதத்தை, ஹிருணிகாவின் சட்டத்தரணி நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
குறித்த கோரிக்கைக்கு அரச தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டனர். எவ்வாறெனினும் வழக்கு விசாரணையை ஒக்டோபர் 8ம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்மானித்தார்.