நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் நிவாரணப் பணிகளை இலகுபடுத்தும் பொருட்டு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுங்கட்சியின் சபை முதல்வரும், உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அசாதாரண காலநிலை சீற்றத்தின் மத்தியில் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பது கடினமாக இருப்பதன் காரணமாக அவசர கால நிலையை பிரகடனப்படுத்துமாறு ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அத்துடன் நிவாரணப் பணிகள் தொடர்பான அரசாங்க சுற்றறிக்கைகளின் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குச்சென்று பாதிப்புகளை நேரில் ஆராய்ந்த பின்னரே நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையில் குறித்த சுற்றுநிருபங்களின் அடிப்படையில் எந்தவொரு நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, நிவாரணப் பணிகளுக்கு தடையாக இருக்கும் சுற்றுநிருபங்கள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாகவும், நிவாரணப் பணிகளை இலகுபடுத்தும் வகையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது குறித்து கவனத்தில் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.