நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க கல்விமான்கள் முன்வரவேண்டும்-ஜனாதிபதி அழைப்பு

262
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை எதிர்காலத்தில் பிறக்கவுள்ள பிள்ளைகளின் நன்மை கருதி அவற்றைத் தீர்ப்பதற்கு கல்விமான்களும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி  வலியுறுத்தினார்.
நேற்று (08) பிற்பகல் பத்தரமுல்ல வோட்டஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்ற ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பழைய மாணவர்கள் சங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
மானிட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இன்று முக்கிய தடையாக போலியான மனிதர்களின் கோசங்களும் கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளின் மௌனமும் விளங்குவதாக அமெரிக்க மனிதநேய தலைவர் ஒருவரான மாட்டின் லூதர் கிங் வெளியிட்ட கூற்றினை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இது அன்றிலும் பார்க்க இன்று எமது நாட்டுக்கு மிகப் பொருத்தமாக உள்ளதெனக் குறிப்பிட்டார்.
நாட்டுக்குத் தேவையான கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளை உருவாக்குவதற்காக பல்கலைக்கழ கங்களில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் அனைத்து கல்வி மான்கள் மற்றும் புத்திஜீவிகளின் பங்களிப்பினை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி இதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார்.
இன்று நாடு என்ற ரீதியில் எம்மால் தீர்த்துவைக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளுள் மனிதவள பற்றாக்குறை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பிரதீப பிரணாம‘ விருது வழங்கும் விழாவின் போது 47 பழைய மாணவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் விருதுகளை வழங்கி வைத்தார்.
சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர், சங்கைக்குரிய எகொடமுல்லே அமரமோலி தேரர், சங்கைக்குரிய கலபொட ஞானீஸ்வர தேரர் ஆகியோரும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் விருதுகளைப் பெற்றுக்கொண்டதுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மற்றும் அரச சேவையில் பணியாற்றும் உயர்மட்ட உத்தியோகத்தர்கள் பலர் ஜனாதிபதியிடம் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
அமைச்சர்களான எஸ்.பி.திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உள்ளிட்ட விசேட அதிதிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
SHARE