துருக்கியிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள ஈரானிய பெண்ணுக்கு அடைக்கலம் வழங்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஈரானை சேர்ந்த நேடா அமின் என்ற பெண் ஈரான் நாட்டு அரசியல் நிலவரங்கள் பற்றியும், அங்குள்ள அடக்குமுறைகள் பற்றியும் தனது வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
இதனால் பலமுறை கைது செய்யப்பட்ட நிலையில் இவர் எழுதிய புத்தகத்துக்கும் அரசு தடை விதித்தது.
எனவே கடந்த 2014ம் ஆண்டு ஈரானை விட்டு வெளியேறிய அமின் துருக்கியில் தன்னை அகதியாக பதிவு செய்து கொண்டார்.
அங்கு ‘தி இஸ்ரேல் டைம்ஸ்’ பத்திரிக்கையில் பணியாற்றியதுடன் தொடர்ந்து ஈரான் அரசை விமர்சித்து வந்தார்.
இதனால் ஈரான் அரசு அழுத்தம் கொடுக்கவே துருக்கி நேடா அமினை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
ஈரானுக்கு நாடு கடத்தப்பட்டால் உயிருக்கு ஆபத்து என அச்சம் தெரிவித்த நேடா அமின், வெளிநாடுகளில் தஞ்சம் புக அனுமதிக்குமாறு சர்வதேச மனித உரிமை அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் முப்பது நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என துருக்கி குடியுரிமைத்துறை அலுவலகம் கடந்த மாதம் 5ம் திகதி கடிதம் அனுப்பியது.
இதற்கிடையே இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளர் சங்கம், நேடா அமினுக்கு இஸ்ரேல் அடைக்கலம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனையடுத்து மனிதாபிமான அடிப்படையில் நேடா அமினுக்கு உடனடியாக விசா வழங்கியுள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.