நாட்டில் சில ஊடக நிறுவனங்கள் ஒழுக்கத்தை மீறி கட்டுக்கடங்காமல் செயற்பட்டு வருவதாக அமைச்சரவையின் இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

251

நாட்டில் சில ஊடக நிறுவனங்கள் ஒழுக்கத்தை மீறி கட்டுக்கடங்காமல் செயற்பட்டு வருவதாகவும், இவற்றை நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்தும் வகையில் விரைவில் சுயாதீன ஊடக ஆணைக்குழுவை நிறுவவுள்ளதாகவும் அமைச்சரவையின் இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னரே, அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

”நாட்டில் பத்திரிகைகள் எவ்விதமான ஒழுக்க விதிகளும் இன்றி செயற்படுகின்றன. பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவும் பத்திரிகை பேரவையும் பலவீனமான நிறுவனங்களாகவே அறியப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பில் ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியமாகும்.

இதற்கு தீர்வாக, ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் சுயாதீன ஊடக ஆணைக்குழு ஒன்றை நியமிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். இதனை நாங்கள் தனித்து செய்யமாட்டோம். அனைத்து ஊடக நிறுவனங்களினதும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தியே இதனை முன்னெடுப்போம். இதற்காக சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்கள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான ஊடகங்கள் தற்போது பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள ஒழுக்கக்கோவையை பின்பற்றுவதில்லை. எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் தலையிடவேண்டியதன் அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

அதனால்தான் இந்த சுயாதீன ஊடக ஆணைக்குழுவை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆனால் எதனையும் பலவந்தமாக செய்யமாட்டோம். அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியே இறுதி முடிவு எட்டப்படும்” என்றார்.paper

SHARE