நாட்டுக்காக விளையாடினால், நடுவீதியில்தான் நிறுத்துவீர்களா?  – கொதிக்கும் அனிதா

606

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் திரும்பியவர்களுக்கும் மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ‘ இந்த ஆண்டாவது அர்ஜுனா விருது கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தேன். 16 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடியும் எங்களை அங்கீகரிக்க மறுப்பது ஏன்?’ எனக் கொதிக்கிறார் இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியின் கேப்டன் அனிதா பால்துரை.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அனிதா பால்துரை, இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியின் தவிர்க்க முடியாத வீராங்கனை. உலகின் மிகச்சிறந்த பத்து வீராங்கனைகளில் ஒருவராக 2013-ம் ஆண்டு தாய்லாந்தில் தேர்வு செய்யப்பட்டவர். எட்டு முறைக்கும் மேல் ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்காக கலந்து கொண்ட ஒரே இந்திய வீராங்கனை. கடந்த 16 ஆண்டுகளாக கூடைப்பந்துக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அனிதாவின் புரஃபைல் கொஞ்சம் நீளமானது. தொடக்க காலங்களில் அனிதா தலைமையில் தமிழக கூடைப்பந்து அணி தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்றார். 2005-ம் ஆண்டு தாய்லாந்து டோர்ணமென்ட்டில் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்வதற்கும் இலங்கை, ஆசிய பீச் விளையாட்டில் தங்கம் வெல்வதற்கும் அனிதாவின் பங்களிப்பு மிக முக்கியமானது.

” எங்களுக்கான அங்கீகாரமே மத்திய அரசின் விருதுகள்தான். தொடர்ச்சியாக அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பித்து வருகிறேன். ‘ இந்த ஆண்டு கண்டிப்பாக கிடைக்கும்’ என உறுதி அளித்தார்கள். ஒலிம்பிக் போட்டியை முடித்துக் கொண்டு வந்த 15 பேருக்கு அர்ஜுனா விருதை அறிவித்துவிட்டார்கள். கூடைப்பந்து அணியை ஒரு பொருட்டாகவே அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” எனக் கொந்தளிப்போடு பேசத் தொடங்கினார் அனிதா பால்துரை. தொடர்ந்து நம்மிடம், ” தமிழ்நாட்டில் இருந்து அர்ஜுனா விருதுக்காக சென்ற ஃபைல்களில் என் பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது. ‘ வேறு யாருடைய பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. நம்பிக்கையோடு இருங்கள்’ என மாநில விளையாட்டுத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். 100 சதவீத தகுதியோடு இருப்பதால், ‘ கட்டாயம் என்னுடைய பெயர் இடம்பெறும்’ என நம்பினேன். ரயில்வே நிர்வாகமும் என் பெயரை பரிந்துரை செய்திருந்தது. 15 பேருக்கு அர்ஜுனா விருதை அறிவித்தவர்கள், கூடைப்பந்து மற்றும் வாலிபால் அணியைக் கைவிட்டுவிட்டார்கள். ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு மத்திய அரசின் விருதுப் பட்டியலையே மாற்றிவிட்டார்கள். ‘ அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம்’ என கைவிரித்துவிட்டார்கள். கடந்த ஆண்டு சைனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடினோம். இந்த ஆண்டு முழுவதும் எந்த சர்வதேச போட்டிகளும் இல்லை. பிறகு எப்படி அடுத்த ஆண்டு விருதுக்காக நாங்கள் விண்ணப்பிக்க முடியும்?” என ஆதங்கப்பட்டவரிடம்,

‘விருதுப் பட்டியலில் இடம் பெறாததற்கு இது மட்டும்தான் காரணமா?’ என்றோம்.

” மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸ்,பேட்மின்டன் உள்ளிட்ட தனிநபர் பிரிவு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு அதிகளவிலான புள்ளிகள் கிடைக்கும். அதுவே, குழு விளையாட்டுக்களில் தங்கம் வென்றாலும், தனிநபர் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு என்ன மதிப்பெண் கொடுக்கிறார்களோ, அதே புள்ளிகள்தான் எங்களுக்கும் கிடைக்கும். ஒருவர் தனிநபர் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வென்றால், அவருக்கு 300 புள்ளிகள் கிடைக்கும். எங்களுக்கு ஒரு தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்தாலும், 100 புள்ளிகளுக்கு மேல் கிடைக்காது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போக்குவதற்கு விளையாட்டுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வந்தவர்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள். எங்கள் வாழ்நாளையே கூடைப்பந்து விளையாட்டுக்காக அர்ப்பணித்து விளையாடி வருகிறோம். அங்கீகாரத்தைத் தருவதற்கு அரசுக்கு விருப்பமில்லை. இந்த ஆண்டு கூடைப்பந்தையும் வாலிபால் விளையாட்டையும் விருதுப் பட்டியலில் இருந்து புறக்கணித்துவிட்டார்கள். மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பித்தும் எந்தப் பதிலும் இல்லை”.

இந்திய கூடைப்பந்து பெண்கள் அணிக்கு அரசின் உதவிகள் கிடைக்கிறதா?

“ வெளிநாடுகளை ஒப்பிடும்போது தரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். சீனா, ஜப்பான் நாடுகளை ஒப்பிடும் வகையில், நமது அணிக்கு எந்தவித வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. நமது வீராங்கனைகளின் திறமை மீது யாரும் குறை சொல்ல முடியாது. ஆசிய அளவில் இந்திய பெண்கள் கூடைப்பந்து அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. சீனா வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு பயிற்சியாளர், மருத்துவ ஆலோசகர் என்று ஏராளமான வசதிகளை அந்த நாடு செய்து தருகிறது. எங்களுக்கு நாங்களேதான் மருத்துவ உதவிகளை பரிமாறிக் கொள்ள வேண்டும். எங்களுக்கு உதவியாக வருகின்ற பிஸியோதெரபிஸ்ட்டுகளிடம் சொல்லிக் கொள்ளும்படியான உபகரணங்கள் இருக்காது. எதாவது உதவி கேட்டால், ‘ அரசு ஒதுக்கும் அலவன்சுக்கு இதுதான் வாங்க முடியும்’ என்று சொல்வார்கள். அதனால் நாங்களே சக வீரர்களே கால் மூட்டுக்கு மசாஜ் செய்துவிடுவோம். யாரையும் எதிர்பார்ப்பது இல்லை.

நாட்டுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடி வென்றாலும், அரசு சார்பில் எந்த நிதி உதவியும் கிடைக்காது. அதுவே, மற்ற போட்டிகள் என்றால் பணத்தைக் குவித்துவிடுவார்கள். விளையாடச் செல்லும் இடங்களில் சாப்பாடு, தங்கும் இடம் கொடுப்பார்கள். அதைத்தாண்டி எதையும் எதிர்பார்க்கக் கூடாது. தனி நபர் ஆட்டங்களில் பங்கெடுத்தால் அதிக முக்கியத்துவம் கிடைக்கும். சானியா மிர்சா, சாய்னா நேவல், பி.வி.சிந்து போன்றவர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. குழு விளையாட்டுக்களுக்கு எந்தவித அங்கீகாரமும் கிடையாது. கடந்த ஆண்டு அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பிக்கும்போது, என் ஃபைலைப் பார்த்த விளையாட்டுத் துறை அதிகாரி, ‘ நோ மெடல்…யூஸ்லெஸ் கேம்’ என தூக்கிப் போட்டதாக தகவல் வந்தது. அப்படியானால், ‘ பேஸ்கெட் பால், வாலிபால் போன்றவற்றை விளையாட்டுத்துறை பட்டியலில் இருந்து நீக்குங்கள்’ என சண்டை போட்டேன். பள்ளி நாட்களில் இருந்து இன்று வரையில் கூடைப்பந்தை வைத்துக் கொண்டு போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். அடுத்த ஆண்டாவது அர்ஜுனா விருது கொடுப்பார்களா என்பதும் சந்தேகம்தான்” எனக் கொட்டித் தீர்த்தார் இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியின் கேப்டன் அனிதா பால்துரை.

anitha 600

SHARE