நாட்டை மீட்டெடுப்பது அனைத்துப் புத்திஜீவிகளினதும் பொறுப்பாகும்- மஹிந்த ராஜபக்ஸ

144

நாட்டை மீண்டும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்ல, அனைத்துப் புத்திஜீவிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேட்டக்கொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் இந்த பொறியியலாளர் மாநாடு போன்று இதற்கு முன்னர் எங்கும் இடம்பெற்றதில்லை.

அதுவும் புதியக் கட்சி என்றவகையில், இதனை நடத்துவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டில் தற்போது இருக்கும் அரசியல் நிலைமையால் பொறியியலாளர்களுக்கு எவ்வாறான பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளது என்பதையும் தெரிந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

எமது காலத்தில், நாட்டில் பல்வேறு கட்டுமாணங்கள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததோடு, அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டிருந்தோம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சார வசதி மற்றும் வீதிகளை நிர்மாணித்துக் கொடுத்தோம். கிராமங்களை அபிவிருத்தி செய்து, அனைத்து வசதிகளையும் அங்கு கொண்டு சென்றோம்.

அந்தவகையில், நாம் எதிர்க்காலத்தில் கொள்கைகளை ஸ்தாபிக்கும்போது இவ்வாறான அபிவிருத்திகளுக்கு உதவிய பொறியியலாளர், வைத்தியர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகளின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இதற்கான, தருணமும் நெருங்கி வந்துவிட்டது என்பதுதான் எமது நோக்கமாகும். இன்று இந்த நாட்டில் அரசாங்கம் ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை.

பிரதமர் ஜனாதிபதியை விமர்சிப்பதும், ஜனாதிபதி பிரதமரை விமர்சிப்பது, அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் குற்றங்களை சுமத்திக் கொண்டிருப்பதைத் தான் நாம் தினம் தினம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அரசாங்கத்தில் இந்த ஒற்றுமையில்லாத செயற்பாட்டினால், இறுதியில் எமது நாட்டு மக்களே பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு, ஒரு கொள்கை இல்லை.

ஆட்சிக்கு வந்து இத்தனை வருடக்காலத்தில் எந்தவித அபிவிருத்திகளையும் இவர்கள் மேற்கொள்ளாத காரணத்தினால் தான் நாடு இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது எமது மட்டுமன்றி அனைத்துப் புத்திஜீவிகளினதும் பொறுப்பாகும்“ என தெரிவித்துள்ளார்.

SHARE