நான் கண்ட யாழ்ப்பாணம் 1 – நடராஜா குருபரன்

303
நான் கண்ட யாழ்ப்பாணம் 1 - நடராஜா குருபரன்:-

 (யாழ்ப்பாணம் வரவேற்கிறது)
யாழ்ப்பாணத்தில்  மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், என விதம் விதமான இருசக்கர வாகனங்கள் வீதிகளை நிறைக்கின்றன. இவ்விருசக்கர வாகனங்களின் ஓட்டுனர்களில் பெரும்பான்மையானவர்கள் இளையவர்கள். வேலைக்கும் குடும்பச் சுமைக்கும் இடையில் அல்லாடும் பெண்களும் பெருமளவுக்கு இரு சக்கர மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இளையவர்களின் கைகளில் உருளும் இந்த இரு சக்கர வண்டிகளுக்கு வேகக்  கட்டுப்பாடு கிடையாது. நிதானமும், பொறுமையும், பொறுப்பும் அற்ற பெரும்பாலான இளையவர்கள், மற்றவர்களை மோதுவது மட்டுமன்றி தாமும் எங்காவது மோதுண்டு கணிசமான விபத்துகளை ஏற்படுத்துகின்றார்கள். சிறிய விபத்துகளில் தொடங்கி கோரமான விபத்துகள் வரை நடந்தேறுகின்றன.
காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லும் இடத்தை அடைய முன்பாக ஒரு விபத்தையாவது காணாமல் செல்ல முடியாது என்னும் நிலமை தோன்றிவருகிறது.  விபத்துக்கு உட்படாமல்  வீதியில் பாதுகாப்பாகச் செல்ல வேண்டுமே என்று ஏங்க வேண்டியுள்ளது.
ஓர் நாள் காங்கேசன் துறை வீதி வழியே இருசக்கர வண்டியிற் (பல்சரில்) சென்றுகொண்டு இருந்தேன். என் முன்னால் ஒரு நடுத்தர வயது பெண் சார்ளி சுப்பரில்  (சிறிய வண்டியில்) மெதுவாக நிதானமாக, தான் செல்ல வேண்டிய பக்கத்தில் சென்றுகொண்டிருந்தார்.
எதிர்த் திசையில், இரு சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் தமக்குள் சந்தோசமாகப் பேசியவாறு, சென்று கொண்டிருந்த  நடுத்தர பெண்ணின் இருசக்கர வண்டிக்கு  குறுக்காக  வீதியை கடக்க முற்படுகிறார்கள். குறித்த பெண்ணின் சார்ளி சுப்பர், திரும்பமுயன்ற  இளைஞர்களின் வண்டியுடன் மோதியதால் அப்பெண் வீதியில் வீழ்கிறார். புறம் கைகள் வீதியில் உரசி இரத்தம் வடிய பின் பதட்டத்துடன் எழுகிறார்.
வந்த இளைஞர்களோ தாம்  திரும்பியது சரி என்றும், அந்தப் பெண்ணே தனது பிறேக்கை அழுத்தவில்லை எனவும் வாதிட்டனர். எம் கண்முன்னே நடந்த விபத்தில் 100 வீத தவறும் இளைஞர்கள் மீதிருந்தது. ஆனால் அவர்களோ தமது தவறை ஏற்கத் தயாரில்லை.
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பணத்திலும், உள்நாட்டில் பெற்றோரை, அல்லது தமது பாதுகாவலரை மிரட்டிப் பெறும் பணத்திலும் பொழுதை ஊதாரித்தனமாகப் போக்கும்  பிரிவினரின் கைகளில் இருக்கும் மோட்டார் வாகனங்கள், போக்குவரத்தை உரியமுறையில் மேற்கொள்ளும் மக்களுக்குப் பெரும் தலையிடியை கொடுப்பனவாக மாறியுள்ளதாகக் மக்கள் கூறுகின்றனர்..
மேற்குறித்த ஊதாரித்தனமான இளையோரின்  சமூகப் பிறழ்வுகளும் தடம் மாறிய செயற்பாடுகளும்  வடக்கை உலுப்பிக்கொண்டு இருக்கின்றன எனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏ9 வீதி திறக்கப்பட்டதன் பின், வடக்கை நோக்கிப் படை எடுத்த லீசிங் கம்பனிகள், கட்டுப்பாடற்ற வகையிற் கடன் அடிப்படையில் வாகனங்களை வாரி வழங்கியதை இங்கு நினைவு கூரவேண்டும். மறுபக்கத்தில் கடன் அடிப்படையில் வாகனங்களைப் பெற்றவர்கள் மாதாந்தக்  கொடுப்பனவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுப் பலரது வாகனங்களும் பறிமுதல்  செய்யப்பட்டுக் கொடுத்த பணத்தையும் இழந்து புலம்பித் திரிகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்  சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்று வாகனங்களை ஓட்ட முற்படுகின்ற போது அவர்களுக்கான காப்புறுதி, வயது கூடிய அனுபவம் உள்ளவர்களின் காப்புறுதியை விடவும் உயர்வானதாக  நிர்ணயிக்கப்பட்டு உள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டும். மேலும் சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றைப் பெறுதல் அங்கு இலங்கை போன்று இலகுவானதுமல்ல. நீண்ட பயிற்சி, சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து முறைமைகள் தொடர்பான முறையான அறிவூட்டல் அதற்கான சோதனைகள் எனப் பலவற்றைக் கடந்த பின்னரே சாரதி அனுபதிப்பத்திரம் கிடைக்கும்.
ஆனால் அத்தகைய கட்டுப்பாடுகள்  மிகவும் குறைந்த இலங்கை போன்ற நாடுகளில் குறிப்பாக 30 வருட யுத்தத்தின் பின் உலகத்துக்கு திறந்துவிடப்பட்ட வடக்கில் தறி கெட்ட மாடுகள் போலப் பல இளையவர்கள் வாகனமோட்டுவதைத் தடுக்க மாகாண சபையும் மத்திய  அரசும் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இது மட்டும் போதும் எனவும்  நான் கருதவில்லை. போரின் இறுக்கமான சூழலுக்குள் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டுத், தங்கு தடையற்றுப் பணம் புரண்டு ஓடுகின்ற ஒரு சமூகத்தின் இளைய தலைமுறையினருக்கு அறிவூட்டல்களும் ஆற்றுப்படுத்தல்களும் கூட  அவசியமானவை.
இளமையின் கிளர்ச்சியில் துள்ளித் துள்ளித் திரியும் பருவத்தினர் ஆக்கபூர்வமான வழிகளில் தமது சக்தியைப் பயன்படுத்துவதற்கு வழிமுறைகளும் கண்டறியப்பட வேண்டும். இல்லையேல் வடக்கை வேறு சக்திகள் அழிக்கத் தேவையில்லை அது தானே சிறுகச் சிறுக அழிந்துவிடும்.

SHARE