முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான சாட்சியங்களை, நீதிமன்ற த்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
நாமல் ராஜபக்ஷ நிதிச் மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுத் (திங்கட்கிழமை) இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாயினை, தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை, நீதவான் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதியன்று, இந்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்த நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 18ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.